தமிழர் நிலங்களை சூறையாடும் சிங்கள அரசு! உலக நாடுகள் தலையிட வைகோ வேண்டுகோள்!
இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை :
“இலங்கை விடுதலை பெற்றது முதல், ஆட்சிப் பொறுப்பு வகித்த சிங்களர் பெரும்பான்மை அரசுகள், தமிழர் தாயகப் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கத்துடன், சிங்களவர்களைக் கொண்டு வந்து குடி அமர்த்தினர். கிழக்கு மாகாணத்தில் வேகமாக நிகழ்ந்த சிங்களர் குடியேற்றங்களால், தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. உரிமைகளை இழந்தார்கள். அடுத்து அவர்கள், வடக்கு மாகாணத்தைக் குறிவைத்தனர். தமிழர்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக, உள்நாட்டுப் போர் மூண்டது. லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என, மார்சுகி தாருஸ்மன் தலைமையில் ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு அறிக்கை கூறுகின்றது.
2009 ஆம் ஆண்டு அந்தப் போர் முடிவுக்கு வந்தது. 12 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை. இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.
சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பில், தடுக்கி விழுந்தால் ஒரு படை முகாம் அமைத்து, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரங்களை முடக்கிய கொடுமை தொடருகின்றது. உலக நாடுகளை ஏமாற்ற, ஏற்கெனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக்கொண்டே, மறுபுறம், புதிய நிலங்களைப் பறிக்கின்றது.
அண்மையில், மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களைக் கொண்டு வந்து நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருக்கின்றது. இந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டுகின்றார்கள்.
எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாகத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களைப் பறிக்கின்றார்கள். ராஜபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமான சிங்கள நிறுவனங்கள், பெரிய கருவிகளைக் கொண்டு வந்து, மணல் அள்ளுகின்றார்கள். அதனால், அருகில் உள்ள தமிழர்களின் விளைநிலங்களில் பயிர்கள் அழிவதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை; தமிழர்களின் எதிர்ப்புகளைக் கண்டு கொள்வது இல்லை.
மணல் அள்ளுவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை, மேற்கண்ட நிறுவனங்கள் மதிப்பதே இல்லை என, கிழக்கு மாகாணத்தின் சிங்கள ஆளுநர் அனுராதா எகம்பத் கவலை தெரிவித்து இருக்கின்றார்.
கோத்தபய ராஜபக்ச, இலங்கைக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, தமிழர்களின் நிலங்களைப் பறிப்பதை விரைவுபடுத்தி இருக்கின்றார். நிலம் மற்றும் பாசன மேலாண்மை மகாவலி ஆணையம், தமிழர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில், சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து குடியமர்த்தி இருக்கின்றது. இதை எதிர்த்து, மயிலத்தமடு பகுதி வாழ் தமிழ் விவசாயிகள், பல மாதங்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
வனங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறிப்பது மட்டும் அல்லாமல், கடந்த ஆண்டு, தொல்லியல் துறையின் சார்பில் பௌத்த சமயத் தடங்கள் குறித்த ஆய்வு என்ற பெயரில், தமிழர்களின் நிலங்களைப் பறிக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள். கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இலங்கை நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஆனால், தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
தொல்லியல் துறை ஆய்வு என்ற பெயரில், கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ள, குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்ச ஒரு குழு அமைத்தார். அந்தக் குழுவில், சிங்களர்களும், பௌத்த மதகுருக்களும் மட்டுமே இடம் பெற்று இருக்கின்றார்கள். அவர்கள், மட்டக்களப்பு குசலனமலை குமரன் கோயில், முன்பு பௌத்தர்களின் வழிபாட்டு இடம் என நிறுவுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
இதுபோன்ற முயற்சிகளால், தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கெனவே பறித்துக் கொண்ட நிலங்களில் இருந்து சிங்களக் குடியேற்றங்களையும், சிங்களப் படை முகாம்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.
Post a Comment