ஐ.நாவில் இந்தியா ஆதரித்து வாக்களிக்கும் - சுமந்திரன் நம்பிக்கை


இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்கும் என்று தாம் வெகுவாக நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் ‘த இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், வாக்களிப்பதும், வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதும் இந்தியாவின் தீர்மானமாக இருந்தாலும் ரூபவ் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியா ஐ.நா. பேரவையில் தெரிவித்துள்ளதால், தமது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா கடந்த 2009, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதோடு 2014 ஆம் ஆண்டில் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இம்முறை வாக்களிப்பின்போது இந்தியா எதிராக செயற்படாது என்ற நம்பிக்கை உள்ளது.

இதேவேளை, ஐ.நா.பிரேரணை வலுவற்றது என்று பிரசாரம் செய்பவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களாகவே உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்த மற்றும் முன்வைத்த உள்ளடக்கங்கள் இந்தப் பிரேரணையில் உள்ளன என்றார்.

No comments