சம்பூரில் புலிகளின் ஆயுதக்கிடங்கு!!


சம்பூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதக் கிடங்கு இருப்பதாக காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (18) மாலை அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இதன்போது அங்கிருந்து எதுவிதத் தடையங்களும் மீட்கப்படவில்லை.

மூதூர் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஐ.முபாரிஸ் மேற்பார்வையில் இந்த அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் சம்பூர் காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி புத்திக்க ராஜபக்ச இராணுவ அதிகாரிகள் பாட்டாளிபுரம் கிராம உத்தியோகத்தர் உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தனர்.

குறித்த இடத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மருத்துவமனை இருந்ததுடன் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கைக் கடற்படை முகாம் இருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments