முதலில் துள்ளுவர், எகிறுவர்! பின்னர் முனங்குவர், பதுங்குவர்! பனங்காட்டான்


கடந்த இரண்டு வாரங்களில் கோதபாயவும் அவரது அமைச்சர்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுபவைகளும் திடுதிப்பென குத்துக்கரணங்கள் அடிப்பதும் ஜெனிவாவை நம்ப வைக்க அல்லது குளிர்மைப்படுத்த மேற்கொள்ளப்படுபவை என்பதை சர்வமும் தெரிந்த சர்வதேசம் நன்கறியும். முதலில் துள்ளுவதும் பாய்வதும் எகிறுவதும், நிலைமை கட்டுமீறும்போது தலைசாய்ப்பதும் முனங்குவதும் பதுங்குவதும் சிங்கள தேச அரசியலுக்கு கை வந்த கலை. புனைந்து எழுதப்பெற்ற ஷமகாவம்சம்| இதனையும் கற்றுக் கொடுத்துள்ளது போலும். 

இந்த ஆண்டின் முதலாவது ஜெனிவா திருவிழா நிறைவுறும் காலம் இது. இலங்கைத் தீர்மானம் தொடர்பாக கடந்த சில நாட்களாக இடம்பெறும் கயிறு இழுப்பின் விவாதம் 22ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, அன்றே வாக்கெடுப்பும் இடம்பெறலாம். தவறின் அமர்வின் இறுதி நாளான 23ல் வாக்களிப்பு இடம்பெறும். 

பிரித்தானியா தலைமையில் ஆறு நாடுகள் முன்வைத்த இத்தீர்மானத்தை எவ்வகையிலாவது தோல்வி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கோதபாய தரப்பு முனைப்பில் உள்ளது. இதற்காக தலையால் கிடங்கு வெட்டி மூக்கால் மண் அள்ளும் வேலைகளும் இடம்பெறுகின்றன. 

போர்க்குற்றம் புரிந்த ராணுவத்தினர் மீதான கடும் நடவடிக்கைகளுக்கு மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்சிலட் தமது அறிக்கைகளில் பரிந்துரை செய்துள்ளார். இவைகளை நடைமுறைப்படுத்த நேரின் தற்போதைய ராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன உட்பட அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 112 படைத்துறையினர் வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்படும். 

சவேந்திர சில்வாவுக்கு ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது. வெளிநாடுகளுக்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட சில படைத்துறை அதிகாரிகள் அப்பதவிகளை ஏற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் (கனடாவுக்கு தூதுவராக நியமிக்கப்பட்ட இலங்கைக் கடற்படை முன்னாள் தளபதி உட்பட). 

பிரித்தானியாவுக்கான தூதுவராக நியமனம் பெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, போர்க்குற்றவாளியென சுட்டப்பட்டிருந்ததால் பதவி இழந்தார். அமைதியாக போராட்டம் நடத்திய தமிழர்களை நோக்கி கழுத்தறுக்கப் போவதாக சைகை காட்டிய தூதரக அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். போர்க்குற்றவாளியென அடையாளம் காட்டப்பட்ட பிரிகேடியர் சுவர்ண பொத்தோட்ட பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

மிச்சேல் பச்சிலட்டின் பரிந்துரைகள் அமலாகுமானால் சம்பந்தப்பட்ட படைத்துறையினர் இலங்கைக்குள்ளேயே முடக்கப்படுவர். சொத்துகளுக்கு ஆபத்து ஏற்படலாம். இவ்வாறான ஒரு நிலைமையை போர்க்காலத்தில் இவர்களை வழிநடத்திய அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிரும்பவில்லை. 1971 ஏப்ரல் மாதத்திலிருந்து இவரும் ஒரு ராணுவ அதிகாரியாக பணியாற்றியவரே. இதனால்தான் ஆணையாளர் பரிந்துரைகள் மறுக்கப்படுகின்றன. 

போர்க்காலத்தில் நிலவிய அதே அடக்குமுறைகளும், துன்புறுத்தல்களும் இப்போதும் தொடர்கின்றன என்று ஆணையாளர் குறிப்பிட்டிருப்பது, இலங்கை ஆட்சித் தரப்பை பொங்கி வெடிக்க வைத்துள்ளது. இதனால் வழமைபோல இறையாண்மை, சுயமரியாதை என்று கூறி இதனை இலங்கை நிராகரிக்கிறது. 

இறையாண்மை என்பது ஒரு நாட்டுக்கு மட்டுமன்றி ஓர் இனக்குழுமத்துக்கும் உள்ளது என்பதையும், சுயமரியாதையும் அவ்வாறானதே என்பதையும் ஆட்சியாளர்கள் ஏனோ மறந்து விட்டனர். 

இலங்கையைப் பிரிப்பதற்கோ, தனிநாடு உருவாகுவதற்கோ ஜெனிவா தீர்மானங்கள் கோரவில்லை. ஓர் இனம் தனது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து - தவிர்க்க முடியாததால் ஆயுதங்களை ஆயுதங்களால் சந்திக்க நேர்ந்தது. உலக நாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இனஅழிப்புக்கான பொறுப்புக்கூறலையும் சர்வதேச நீதிப் பொறிமுறையையும் இந்தத் தீர்மானங்கள் கோருகின்றன. அவ்வளவுதான். 

போர் இடம்பெற்றது உண்மை. இங்கு கொலைகள் நீதி விசாரணையின்றி இடம்பெற்றன. மனித உரிமைகள் மீறப்பட்டன. மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தாராளமாக இடம்பெற்றன. இதற்கானதே ஜெனிவாத் தீர்மானம்.

இலங்கைக்கு ஷசுதந்திரம்| கொடுத்து சிங்களவரை ஆட்சிக் கதிரையில் அமர்த்திய பிரித்தானியாதான் இப்போது நீதி கேட்கும் ஜெனிவா தீர்மானத்தை முன்னெடுத்துள்ள முதன்மை நாடு. 

இதுபற்றி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கருத்துக் கூறுகையில், இலங்கைக்கு பிரித்தானியா துரோகம் செய்கிறது என்றும், இது நட்புறவற்ற செயல் என்றும் தெரிவித்துள்ளார். போர்க்காலத்தில் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கியபோது நண்பராகவிருந்த பிரித்தானியா, போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூறலும் நீதியும் கேட்கும்போது துரோகியாகி விட்டது. எப்படி இருக்கிறது இது?

தமிழருக்கு எதிராக இனவாதம் பேசியவாறு தமிழர் உரிமைகளைப் புதைப்பதில் முன்னணியில் நிற்கும் புதிய அமைச்சர் சரத் வீரசேகர, காட்டிக்கொடுப்பது பற்றி வியாக்கியானம் கொடுக்கிறார். சர்வதேச சமூகத்திடம் (தமிழர்) நீதியை எதிர்பார்ப்பது இலங்கையை காட்டிக்கொடுக்கும் செயல் என்கிறார் இந்த அமைச்சர். 

இவரது கூற்று, இலங்கை குற்றம் புரிந்தது என்பதையும் - அதனால் அதனைக் காட்டிக்கொடுக்க தமிழர் முனைகின்றனர் என்பதனையும் கூறாமல் கூறுகிறது. 

சர்வதேச சமூகத்தின் ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்கும் வகையில் வடக்கு கிழக்கு மக்கள் செயற்படக்கூடாது என்ற ஆலோசனையை திருமலை நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் தினேஸ் குணவர்த்தன வெளியிட்டுள்ளார். போர் முடிவுற்று பத்தாண்டுகளாக இலங்கை அரசாங்கத்திடம் நீதி கேட்ட தமிழர் அது நிராகரிக்கப்பட்ட நிலையில் சர்வதேசத்திடம் நியாயம் கேட்பதில் தவறென்ன?

சரத் வீரசேகரவின் காட்டிக்கொடுப்பது என்ற கூற்றும், தினேஸ் குணவர்த்தனவின் இலங்கை சர்வதேச ஆதரவை இழக்கும் நிலை என்ற கூற்றும், ஒன்றோடொன்று இணைந்து இவர்களின் போர்க்குற்றத்தை இவர்களே ஒப்புக்கொள்வதை புட்டுக்காட்டுகிறது. 

ஜே.வி.பி.யினர் 1989ல் அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் தண்டிக்கப்பட்டபோது அதனை ஜெனிவாவுக்கு எடுத்துச் சென்று நீதி கேட்டவர் மகிந்த ராஜபக்ச. ஆக, ஜெனிவாக் கதவை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்காக முதலில் திறந்தவர் தங்கள் பிரதமர் (முன்னாள் ஜனாதிபதி) மகிந்த ராஜபக்ச என்பதை ஏற்றுக்கொண்டு, அவரைப் பார்த்து நாட்டைக் காட்டிக்கொடுத்த துரோகி என்று இவர்கள் கூற மாட்டார்கள்.

ஜெனிவாவில் கயிறு இறுகுகின்றது என்று தெரியவரும்போது சில அமைச்சர்களின் சுருதி மாறி, ஊடகங்களின் ஊடாக பாடத் தொடங்குகின்றனர். 

குற்றவாளிகளை அரசு பாதுகாக்காது என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் நீர்மேல் எழுத்தாக கூறுகிறார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். தமிழர் தரப்புடனான ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் ரணில் அரசாங்கத்தின் முதன்மையாளராக உலகம் சுற்றி, இறுதியில் பேச்சுவார்த்தையை உடைத்தெறிந்த அதே பீரிஸ்தான் இவர். 

பதவிக்காகவும் சுகபோகத்துக்காகவும் அரசியலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து, சகல ஆட்சியிலும் அமைச்சராகவிருக்கும் இவர் கடைந்தெடுக்கப்பட்ட ஓர் இனவாதி. திடீரென ஞானம் பிறந்தவராக சட்டம் ஒழுங்கு நீதி பற்றிப் பிதற்றுகிறார். 

1987ல் உருவாக்கப்பட்ட 13வது திருத்தத்தை என்றோ முடிந்த விடயம் என்று கூறி, மாகாண சபை முறைமையை எதிர்த்து அதனூடான காணி, பொலிஸ் அதிகாரங்களை மறுத்துரைத்து வந்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, தமது பங்குக்கு - 13வது திருத்தம் இலங்கையின் அடிப்படைச் சட்டம் என்றும், அதன் பிரகாரம் செயற்படுவதற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளது என்றும் வாய் அளந்துள்ளார். 

13வது திருத்தம் அம்பே (முடிந்தது) என்று கூறித் திரியும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் சகாவான பொதுப்பாதுகாப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, திடீரென இந்தக் குத்துக்கரணம் அடித்ததன் காரணம் என்ன? 

இந்தியாவின் விருப்புக்கேற்றவாறு ஜெனிவா தீர்மானத்தின் இறுதி வரைபில், 13வது திருத்தம் அமல் செய்யப்பட வேண்டுமென சேர்த்துக் கொள்ளப்பட்டதால் ஏற்பட்ட மனமாற்றமா, அல்லது ஏமாற்று நாடகமா என்பது ஜெனிவா திருவிழா முடிந்த பின்னர் வெளிச்சமாகும். 

முஸ்லிம் பெண்களின் புர்கா மற்றும் நிகாப் ஆடைகளுக்கு தடை விதிப்பது பற்றி அரசாங்கம் இன்னமும் முடிவெடுக்கவில்லையென இந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தத் தடைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி விட்டது என்றும், அதற்கான பிரகடனத்தில் தாம் ஒப்பம் இட்டு விட்டதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறியது பொய்யா? இல்லையென்றால் அது மாற்றப்பட்டு விட்டதா?

இந்த மாதம் 8ம் திகதி யாழ்ப்பாணத்தில் திடீர் மின்வெட்டை ஏற்படுத்தி இருட்டோடு இருட்டாக வடமாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சகல கோவைகளும் அனுரதபுரம் கொண்டு செல்லப்பட்டன. இந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயிடம் இது சுட்டிக்காட்டப்பட்டபோது, அக்கோவைகள் உடனடியாக மீளக் கொண்டு வரப்படுமென தெரிவித்தார். 

இந்த ஷஅரிச்சந்திர| அமைச்சரின் உறுதிமொழிக்கிணங்க 17ம் திகதி புதன்கிழமை பிற்பகல் கோவைகள் அனைத்தும் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8ம் திகதிக்கும் 17ம் திகதிக்குமிடையில் பத்து நாட்கள். இந்த இடைக்காலத்தில் கோவைகள் ஸ்கான் முறையில் பிரதி பண்ணப்படவில்லையா? எடுத்துச் செல்லப்பட்ட அத்தனை கோவைகளும் திரும்பி வந்தனவா? இந்தக் கணக்கெடுப்பு யாரிடம் உள்ளது? 

1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிரகடனம் செய்த பயங்கரவாத தடை தற்காலிக சட்டம் தொடர்பான சில மாற்றங்களுக்குட்பட்ட அவசர வர்த்தமானி கோதபாய ராஜபக்சவினால் சில நாட்களுக்கு முன்னர் பிரகடனம் செய்யப்பட்டது. முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்காலிக சட்டத்தில் ஒரு திருத்தச் சட்டமாம். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை விசாரித்து தண்டனை வழங்கவும், புனர்வாழ்வு வழங்கவும் ஒரு வருடம் என காலக்கெடு வழங்குப்படுகிறதாம். 

கடந்த இரண்டு வாரங்களில் கோதபாயவும் அவரது அமைச்சர்களும் கூறுபவைகளும் திடுதிப்பென செய்பவைகளும் ஜெனிவாவை நம்ப வைக்க அல்லது குளிர்மைப்படுத்த மேற்கொள்ளப்படுபவை என்பதை சர்வமும் தெரிந்த சர்வதேசம் நன்கறியும். 

முதலில் துள்ளுவதும் பாய்வதும் எகிறுவதும், நிலைமை கட்டுமீறும்போது தலைசாய்ப்பதும் முனங்குவதும் பதுங்குவதும் சிங்கள தேச அரசியலுக்கு கை வந்த கலை. புனைந்து எழுதப்பெற்ற ஷமகாவம்சம்| இதனையும் கற்றுக் கொடுத்துள்ளது போலும். 

No comments