பொறுப்பற்ற செயல்களினால் தினமும் உயிர்ப் பலி எடுக்கும் புகையிரதத் திணைக்களம்


இலங்கையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு உயிராவது பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் பலி எடுக்கப்படுகிறது. பொலிஸ் திணைக்களம் வீதி வாகன விபத்து அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தொடரூந்து  விபத்து மரணங்களுக்கு புகையிரத திணைக்களமே பொறுப்பு என்று கைவிரித்து விடுகிறது. ஒவ்வொரு உயிரிழப்பு ஏற்படும்  போதும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் பரிமாறப்படுவதை தவிர எந்த உருப்படியான நடவடிக்கையோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமோ வழங்கப்படுவதில்லை.

காவலாளிகளை நிறுத்துவதை விட தன்னியக்க பொறிமுறைகளை பயன்படுத்துவது உயிர்பாதுகாப்புக்கு உயர்வானது என ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே காவலாளிகளை குற்றம் சாட்டுவதை விடுத்து  தன்னியக்க பொறிமுறைகளைக் கொண்ட பாதுகாப்பு கடவைகளை நிர்மாணிப்பதற்கு புகையிரத திணைக்களம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரைக்கும் பாதுகாப்பற்ற கடவைகளில் ஏற்ப்படும் உயிரிழப்புகளுக்கும் ஏனைய சேதங்களுக்கும் ஏனைய நாடுகளைப் போல் பொறுப்பு கூறுவதுடன் உரிய இழப்பீட்டுக்  கொடுப்பனவுகளை வழங்க புகையிரத திணைக்களம் முன்வரவேண்டும். தவறினால் வெகுஜனஅமைப்புகளும் மக்கள் பிரதிநிதிகளும் நியாயத்தையும் பொறுப்பு கூறலையும்   நிலைநாட்டுவதற்கு உரிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். 

தன்னியக்க கடவைகள் நிர்மாணிக்கப்படும் வரை தொடரூந்து பாதையை ஊடறுக்கும் பாதையின்  இருபுறமும்  5-7 மீட்டர் தூரத்தில் வேகத்தடுப்பான் பிட்டிகள்  (speed breaker humps ) நிர்மாணிக்கப்படுவதும் புகையிரதப்பாதை தொடர்பான எச்சரிக்கைப் பலகைகள் நிறுவப்படுவதுடன்  அந்தப் பலகைகளில் விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ளவேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தால் வாகனச்  சாரதிகளின் அவதானத்தை தூண்டுவதுடன் விபத்துக்களை குறைக்கவும் விபத்து ஏற்பட்ட நிலையில் அதனால் உருவாகும் பாதிப்புகளையும்  குறைக்க முடியும். அதேவேளை பாதுகாப்பற்ற கடவைகளை அண்மிக்கும் போது தொடரூந்தின் எச்சரிக்கை ஒலியை எழுப்புமாறு தொடரூந்து சாரதிகள் பணிக்கப்பட வேண்டும். 


தொடரூந்து விபத்துகளை தவிர்க்க ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் 

1. தொடரூந்துப் பாதைவழியே நடந்து செல்வதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக புகையிரதப் பாதை வழியே செல்லும் போது செல்லிடதொலைபேசி பாவனையை முற்றாகத்  தவிர்த்துக் கொள்ளவேண்டும். 

2. தொடரூந்து, புகையிரதப்  பாதையை விட மிகவும் அகலமானது என்பதையும் வேகமாக வரும் தொடரூந்துக்கு அருகாமையில் ஏற்படும் காற்று அழுத்தத்தின் காரணமாகவும் பாதிப்பு உண்டாகலாம் என்பதை உணர்ந்து புகையிரதப் பாதையில் இருந்து குறைந்தது  2 -3 மீட்டர் தூரமாவது தள்ளி இருப்பதே பாதுகாப்பானது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். 

3. வீதி வாகனங்களை போல் அல்லாது புகையிரதம் சடுதியாக நிறுத்தப்படமுடியாது என்பதையும் இயந்திரம் நிறுத்தப் பட்ட பின்னரும்  வேகத்  தடுப்பான்கள் (brakes ) செய்லபடுத்தப்பட்ட பின்னரும் பலமீட்டர் தூரம் அது அசைந்து வரும் என்பதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும். 


ஒவ்வொரு உயிரிழப்பின் பின்னரும் உணர்வு பூர்வமாக சிலநாட்கள் அதைப் பற்றி பேசிவிட்டு மீண்டும் அதே இடத்தில் விபத்து ஏற்படும் வரை அதை மறந்து இருக்கும் நிலை மாறி  ஒவ்வொரு உயிரிழப்பின் பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்டஈட்டுக் கொடுப்பனவுகள்  கிடைப்பதற்குரிய செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் எவ்வாறு அந்த இறப்பு தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.  


நன்றி 


Dr முரளி வல்லிபுரநாதன் 

சபை உறுதி செய்யப்பட்ட சமுதாய மருத்துவ நிபுணர் 

No comments