மன்னார் தொடரூந்து விபத்துக்கு நீதி கோரி மக்கள் பேரணி

தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள   தொடரூந்துக் கடவையில் கடந்த 16 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  மதியம்    தனியார் பேரூந்தும்  தொடரூந்து

மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று    திங்கட்கிழமை காலை குறித்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சர்வமத தலைவர்கள் அரசியல் பிரதி நிதிகள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள   புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  மதியம்    தனியார் பேரூந்தும்  தொடரூந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் தலை மன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த பாலச்சந்திரன் தருண் (வயது-14) என்ற மாணவன் உயிரிழந்த தோடு, மாணவர்கள் பொது மக்கள் என 25 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விபத்திற்கு நீதி கோரி குறித்த போராட்டம் இடம் பெற்றது. இன்று காலை 7.45 மணியளவில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமானது.

இதன் போது பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,சர்வமத தலைவர்கள் அரசியல் பிரதி நிதிகள் ஆகியோர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள   புகையிரத கடவை வரை பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.

இதன் போது போராட்டம் இடம் பெற்ற பகுதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேச செயலாளர் , புகையிரத திணைக்கள அதிகாரி ஆகியோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினர்.

இதன் போது பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

குறிப்பாக குறித்த புகையிரத கடவைக்கான   தடையினை புதிதாக அமைத்து, அதற்கான பாதுகாப்பு ஊழியரை புதிதாக நியமிக்க கோரியும் குறிப்பாக வயோதிபர் இல்லாமல் நடுத்தர வயதுடையவர்களை கடமையில் ஈடுபடுத்தி, குறித்த புகையிரத கடவையில் பொலிஸாரின் கண்காணிப்பு இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.

இதன் போது குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.No comments