தூதுவராலங்களிற்கு ஓடித்திரியும் இலங்கை!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, கொழும்பிலுள்ள ரஷ்யத் தூதுவர் யூரி மற்றறெற்றியை தூதரகத்துக்கு நேரில் சென்று சந்தித்து ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளையில், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்கும்.

இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை பெரும்பாலும் இடம்பெறும்.  போதிய நேரம் கிடைக்காவிட்டால் வாக்களிப்பு நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

பிரேரணையை கடுமையாக எதிர்ப்பதென்ற தீர்மானத்தை எடுத்துள்ள இலங்கை, நேச நாடுகளின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான இராஜதந்திர முயற்சிகளை இறுதித் தருணம் வரையில் கைக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்த இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, கொழும்பிலுள்ள ரஷ்யத் தூதுவர் யூரி மற்றறெற்றியை தூதரகத்துக்கு நேரில் சென்று சந்தித்து ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


வெளிவிவகார செயலாளர் ஒருவர் தூதரகம் ஒன்றுக்கு நேரில் செல்வது இராஜதந்திர நடைமுறைகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்படுகின்றது. தேவையென்றால், தூதுவர் ஒருவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைப்பதற்கான அதிகாரம் வெளிவிவகார செயலாளருக்கு உள்ளது.  வெளிவிவகார செயலாளர் தூதுவர் ஒருவரிடம் ஆதரவைக் கோரி தூதரகம் ஒன்றுக்குச் சென்றிருப்பது இதுவே முதல் முறை எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


“நியாயமற்ற இந்தத் தீர்மானத்தை நிராகரிப்பது என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருக்கின்றது” என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்திருக்கின்றார்.

“மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நாம் இரண்டு தடவைகள் நிராகரித்திருக்கின்றோம். தற்போதைய பிரேரணையும் அதன் அடிப்படையிலேயே வந்திருப்பதால், நட்பு நாடுகளின் ஆதரவை நாம் கேட்டுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments