இப்போது வாய்ச்சவாடலே மிஞ்சியுள்ளது - சிவாஜி

தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் அரங்கேற்றியவற்றை ஜனாதிபதியாகிய பின்னர் வேறு ஆட்களை வைத்து அரங்கேற்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் ஆனாலும் கோத்தபாயவுடையதும் அவரது அமைச்சர்களதும் இத்தகைய கருத்துக்களை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றதென்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டுமெனவும் மேலும் தெரிவித்தார்.

2009ம் ஆண்டின் முற்பகுதியில் கொழும்பில் ஊடகவியலாளர் லசந்த சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

லசந்த கொலை பற்றி எழுதிக்கொண்டிருந்த உதயன்-சுடரொளி ஆசிரியர் ந.வித்தியாதரன் அடுத்தடுத்த நாட்களில் கடத்தப்பட்டார்.ஆனாலும் அவரால் இந்திய தூதரக தலையீட்டால் உயிருடன் பாதுகாப்பாக வீடு திரும்பமுடிந்தது.

இவ்வாறான தூதரக பாதுகாப்பற்ற பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.காணாமல் ஆக்கப்பட்டனர்.

மயில்வாகனம் நிமலராஜன் முதல் தராகி சிவராம் வரையாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது பட்டியல் நீளமானது.அவர்களில் பலர்  எனது நெருங்கிய நண்பர்களுமாவர்.



அதே போன்று தெற்கில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னியகொட கொல்லப்பட்டு கடலில் வீசப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

பிரகீத் மனைவி சந்தியா என்னுடன் இணைந்து ஜநாவில் படியேறி சர்வதேசத்திடம் நீதி கேட்டுப்போராடிக்கொண்டிருக்கிறார்.

அதனாலேயே ஊடகப்படுகொலைகள் மற்றும் காணாமல் போதல்களிற்காகவும் நாம் சர்வதேசத்திடம் நீதி கோரி போராடிக்கொண்டிருக்கின்றோம்.

நாட்டின் ஜனாதிபதியாலும் அவரது அமைச்சர்களாலும் தமிழ் பிரதேசங்களில் இப்போது உருவாக்கப்பட்டுக்;கொண்டிருக்கின்ற கும்பல்களாலும் வெறுமனே பழைய பாணியிலான வீர வசனங்களை மட்டுமே பேசமுடியுமன்றி வேறெதனையும் செய்யமுடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனாலும் இவர்களது இத்தகைய அச்சமூட்டும் கருத்துக்கள் ஊடக சுதந்திரத்தினை கேள்விக்குள்ளாக்குகின்றது.

அதே போன்று இங்கு சிலர் அரச புலனாய்வு பிரிவின் ஆதரவுடன் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற நாடகங்களை அரங்கேற்றிவருகின்றனர்.

ஆனாலும் இத்தகைய தரப்புக்கள் தொடர்பில் எமது மக்கள் விழிப்புடனேயே இருப்பதால் அவர்கள் இத்தகைய வேடதாரிகள் தொடர்பில் அலட்டிக்கொள்வதில்லை.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இத்தகைய எடுபிடியொன்றால் பெண் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

அவர்களால் மிரட்ட முடியுமேயன்றி வேறெதும் செய்யமுடியாது.

இந்நிலை தொடருமானால் மக்களை அணிதிரட்டி வீதியில் இறங்கி ஊடகவியலாளர்களை பாதுகாக்க போராட தயாராக இருப்பதாகவும் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

  


No comments