மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு


தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப்  பல்வேறு வழிகளிலும் அடைக்கலமும் ஆதரவும் தந்த  புனிதவதி அம்மா அவர்கள், 07.03.2021 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழீழ விடுதலைப்போராட்டம் வளர்ச்சியுறுவதற்கும் எழுச்சியடைவதற்கும் தொடக்க காலத்தில் தோள்கொடுத்தவர்கள் ஏராளம். இவர்களது தன்னலமற்ற துணிச்சலான செயற்பாடுகள் ஊடாகவே எமது போராட்டம் முன்னகர்ந்தது. இந்தத் தன்னலமற்ற செயற்பாட்டாளர்களில் ஒருவராக போராளிகளால் “வாசன்  அம்மா’’ என இவர் அன்போடு அழைக்கப்பட்டார். 

யாழ் குடாநாடு போராளிகளின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டிருந்த காலம். பலாலிக் கூட்டுப்படைத்தளத்தை முற்றுகையிட்டு, படையினரை வெளியேறவிடாது தடுத்து வைத்திருந்த அக்காலத்தில் புனிதவதி அம்மாவின் அன்பும் பாசமும் போராளிகளை உற்சாகப்படுத்தின. காவற்கடமையில் நிற்கும் போராளிகளில் மட்டுமன்றி, விழுப்புண்ணுற்று வலிமிகுந்திருந்த போராளிகளையும் புனிதவதி அம்மா தன் அன்பால் அரவணைத்துக்கொண்டார். போராளிகளுக்காக எந்தநேரமும் அம்மாவின் வீட்டில் அடுப்பு எரிந்தது. 

தாயக விடுதலைப்போராட்டத்தில்  போராளிகளை அரவணைத்து, உணவுகொடுத்து, அடைக்கலம் தந்த வாசன் அம்மாவின்  இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களின் தேசியப்பணிக்காவும் விடுதலைப்பற்றிற்காகவும் “நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். 

“தேச விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக, உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. எமது நெஞ்சத்து நினைவலைகளில் அவர்கள் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்கள்” என்று எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்  அவர்கள் இயம்பியதற்கிணங்க இவர் தமிழ்மக்கள் மனத்தில் என்றும் நிலைத்து நிற்பார். 

''புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்No comments