நாங்கள் எதிர்பார்த்த ஆஸ்திரேலியா இதுவல்ல: ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறிய தமிழ் அகதிகள்
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பாக செயல்படும் நவுருத்தீவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் உள்ள ஹோட்டலில் ஓராண்டுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நவுருத்தீவுக்கே திரும்பியுள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் தம்பதியரான கிருபாகரனும் பர்மிகாவும் நவுருத்தீவில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த ஹோட்டல் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்பட்டு வருகின்றது.
சுமார் ஓராண்டுக்கு மேலாக அங்கு வாழ்ந்துவந்த இத்தம்பதியர் அங்குள்ள நிலைமைகளை தங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அத்துடன் அவர்கள் வாழும் சூழல் மன ரீதியாக அவர்களை பாதித்துள்ளதாகவும் தங்கள் வாழ்க்கை வீணடிக்கப்படுவதாக உணர்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு தாழ்ப்பாள் கிடையாது எனக் கூறியுள்ள தமிழ் அகதிகள், நாங்கள் எதிர்பார்த்து வந்த ஆஸ்திரேலியா இதுவல்ல என வருந்தியிருக்கின்றனர். இந்த சூழலில் நவுருத்தீவுக்கே மீண்டும் திரும்ப விரும்புவதாக இவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர்களை நவுருத்தீவுக்கு ஆஸ்திரேலிய அரசு அனுப்பி வைத்திருக்கிறது.
நவுருத்தீவைச் சேர்ந்தவர்களால் சில இடர்பாடுகளை சந்தித்தாலும் அங்கு சமூகத்திற்குள் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டதாக அத்தம்பதியர் தெரிவித்திருக்கின்றனர்.
அகதிகளான இத்தம்பதியரின் ஆதரவாளர் ஒருவர், “அவர்கள் நவுருவில் முன்பிருந்த இடத்துக்கே திரும்புவதாக விருப்பம் தெரிவித்து திரும்பியிருக்கின்றனர். ஆனால் அந்த இடம் பழைய பாஸ்பேட் சுரங்கமாகும். அங்குள்ள சூழ்நிலை மிகவும் மோசமானது,” எனக் தெரிவித்துள்ளார்.
Post a Comment