வடக்கில் தடையில்லை:கிழக்கிலும் இருக்க போவதில்லை!

 


தமிழ் மக்களின் போராட்டங்களுக்குக் காரணம் இலங்கை அரசே. அரசு உரிய காலங்களில் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ,யோகேஸ்வனை; ஆகியோர் இன்றைய தினம் கூட்டாக ஆதரவு வழங்க அழைப்புவிடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் வடக்கில் போராட்டம் நடைபெற்றிருக்கின்றது. எவ்வித தடைகளும் இல்லை, குழப்பங்களும் இல்லை. மிகவும் சாத்வீகமான முறையில் வெற்றிகரமாக அந்தப் போராட்டம் நடைபெற்றிருக்கின்றது. எனவே வடக்கில் அந்தப் போராட்டம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற்றதைப் போன்று நாளை கிழக்கிலும் போராட்டம் எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெறுவதற்கு உரியவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொன்னால் எல்லாப் பகுதிகளிலும் ஒரே சட்ட நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும். இங்கு ஜனநாயகம் இருக்கின்றதென்றால் ஜனநாயகத்தின் குரலுக்கு இடம்கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தின் குரலாக இருப்பது மக்கள் உரிமை சார்ந்த விடயங்களே.

நாங்கள் விளையாட்டுக்காக இந்தப் போராட்டங்களைச் செய்யவில்லை. எமது மக்கள் ஒரு நீதியான அரசியற் தீர்வுக்காக எழுபத்து மூன்று ஆண்டுகள் போராடிக் கொண்டே இருக்கின்றார்கள். அகிம்சை, ஆயதம் தற்போது மீண்டும் அகிம்சை என்ற ரீதியில் அந்தப் போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம்.

போர் முடிந்த பி;ன்னராக அரசியற்தீர்வு கிடைக்கும் என்று பான் கீ மூனிடம் மஹிந்த ராஜபக்ஷ முன்னார் கூறியிருந்தார். ஆனால் பதினொரு ஆண்டுகளாக எந்தத் தீர்வும் கிடைக்காது நாங்கள் கையறு நிலையில் இருந்து இந்தப் போராட்டங்களை நடாத்த வேண்டி இருக்கின்றது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments