கூட்டமைப்பு கோட்டை விட்டது!



மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தயானந்தன் தவிசாளராக தெரிவானார். ஆனால், தவிசாளர் பதவி ஏற்ற கையோடே அவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு பாய்ந்துள்ளார்.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கான அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

17 உறுப்பினர்கள் கொண்ட பிரதேச சபையில் நேற்றைய அமர்வில் 16 உறுப்பினர்கள் பங்கேற்றனர். தவிசாளருக்கான பெயர் பிரேரிப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தயானந்தனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நகுலேஸின் பெயரையும் முன்மொழிந்தனர்.

தவிசாளர் தெரிவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, தயானந்தனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும், நகுலேஸ_க்கு ஆதரவாக 5 வாக்குகளும் கிடைத்தன. முன்னாள் தவிசாளரான மகேந்திரலிங்கம் நடுநிலைமை வகித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய இயக்கம், தமிழர் விடுதலைக்கூட்டணி உட்பட அனைத்து கட்சிகளும் தயானந்தனுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதனடிப்படையில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தயானந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.

தெரிவின்போது, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேரில் சென்று புதிய தவிசாளரை வாழ்த்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து தயானந்தன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.




No comments