புத்தாண்டில் சோத்துக்கே வழியில்லை:திஸ்ஸ



நாட்டில் ஏற்பட்டுள்ள பொருள்களின் விலை அதிகரிப்பால் தமிழ், சிங்கள புத்தாண்டை சந்தோசமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கி புத்தாண்டைக் கொண்டாட முடியுமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மக்களுக்குத் தாங்க முடியாதளவுக்கு பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. வரிக்குறைப்பு செய்தாலும் அதன் நன்மை மக்களுக்கு கிடைப்பதில்லை.

அரசாங்கம் அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதி வரிக் குறைப்பு செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அந்த வரிக்குறைப்பின் நன்மை மக்களுக்கு கிடைக்கவேண்டும்.

அல்லது வரியால் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய வருமானம் கிடைக்கவேண்டும். இரண்டும் இல்லாமல் இடையில் இருப்பவர்கள் நன்மையடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சீனி இறக்குமதி வரியை 25 சதத்துக்கு குறைத்ததால் அரசாங்கத்தின் வருமானம் 15.9 பில்லியன் ரூபா இல்லாமல் போயிருக்கின்றது.

இதன் நன்மை மக்களுக்கு கிடைத்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அது மக்களுக்குக் கிடைக்கவில்லை. இன்று பாரியளவில் பொருள்களின் விலை அதிகரித்திருக்கின்றது.

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை சந்தோசமாகக் கொண்டாடும் சூழல் இல்லை. குறிப்பாக கடலை, பயறு, உழுந்து, மா போன்றவற்றுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளைப் பலப்படுத்துவதாக தெரிவித்துக்கொண்டு அரசாங்கம் இறக்குமதிப் பொருள்களுக்குத் தடை விதித்திருக்கின்றது.

அதனால் தான் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்யவேண்டும். அவ்வாறு இல்லாமல் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது.

அத்துடன், அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைக்கப்படுவதாகத் தெரிவித்து எத்தனையோ வர்த்தமானி அறிவிப்புக்களை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

ஆனால், பொருள்களின் விலை குறையவில்லை. அந்த வர்த்தமானி அறிவிப்புக்களுக்குக்கூட மதிப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

பணம் அச்சிட்டு பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது. ஆனால், அரசாங்கம் பணம் அச்சிடும் விதிமுறைக்கு மாற்றாக 2020இல் 650 மில்லியன் ரூபா பணம் அச்சிட்டுள்ளது. 2021இல் 13.2 பில்லியன் ரூபா வரை அது அதிகரித்திருக்கின்றது.அதனால்தான் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துச்செல்கின்றது- என்றார்.



No comments