யாழில்: பதினொரு நாளில் 101 பேர்!யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் 11 நாள்களில் மட்டும் 101 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் நாள்களில் நோய் நிலமையானது தீவிரமடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற ஒன்றுகூடல்கள், விழாக்கள், பயணங்களை தவிர்ப்பதுடன் கோரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொது மண்டபங்களில் நடாத்தப்படும் திருமணங்களில் ஆகக்கூடியது மொத்தமாக 150 பேர் மட்டுமே கலந்துகொள்ளுதல் வேண்டும். வீடுகளில் நடாத்தப்படுகின்ற திருமண நிகழ்வுகளை 50 பேருக்கு மேற்படாமல் நடாத்துதல் வேண்டும்.  

இறுதிச் சடங்குகள் (கோரோனா ஆகக்கூடியது 50 பேருடன் 24 மணித்தியாலங்களிற்குள் நிறைவுசெய்யப்பட வேண்டும். 

இறுதிச் சடங்கிற்காக வேறு மாவட்டங்களிலிருந்து உறவினர்கள் வந்து பங்குபற்றுவதை இயன்றளவு தவிர்க்கவும்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரம் வீட்டிலேயே நிகழ்த்தப்பட வேண்டும். மண்டபங்களில் இவ்விழாக்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. 

கட்டாயம் நடாத்தப்பட வேண்டிய பொதுக் கூட்டங்கள் ஒன்றுகூடல்கள் மட்டும் சுகாதார மருத்துவ அதிகாரியின்  முன் அனுமதியுடன் 150 பேருக்கு மேற்படாது நடாத்தலாம்.வணக்கஸ்தலங்களில் நடாத்தப்படும் திருவிழாக்கள், வழிபாடுகளில் 50 பேர் மட்டுமே ஒருநேரத்தில் கலந்துகொள்ள முடியும். 

பாடசாலைகள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட கோரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்பட வேண்டுமெனவும் ஆ. கேதீஸ்வரன் கோரியுள்ளார்.


No comments