பிப்ரவரி 24ம் தேதிக்கு பிறகு சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம்!

 


சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு ஆளும்கட்சியில் உட்கட்சி பூசல் வெடிக்கும். கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் சிலர் சசிகலாவை நேரடியாக சென்று சந்திப்பார்கள், அதை தொடர்ந்து ஒரு அணி பிரிந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக சசிகலா அமைதியாக உள்ளார். பெங்களூருவில் இருந்து நேராக சென்னை வந்த அவர், தி.நகரிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். கொரோனா பிரச்னை காரணமாக, கடந்த 10 நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். சசிகலாவின் இந்த அணுகுமுறை தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனையை அனுபவிக்க அவர் சிறை சென்றார். அதை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு கூடிய அதிமுக-வின் பொதுக்குழு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்தது. அப்போது இதை எதிர்த்து சசிகலா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவர் சிறையில் இருந்த காரணத்தால் நீண்ட நாட்களாக இவ்வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்தது. தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள அவர், நேற்றுடன்  தனிமைப்படுத்துதலை முடித்துக்கொண்டார். இந்நிலையில் அவர் கையில் எடுத்திருக்கும் முதல் அஸ்திரமாக இந்த வழக்கு தான். அதன்படி, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்,  சசிகலா அதிமுகபொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்ட வழக்கை உடனே விசாரிக்கும் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

அடுத்த அஸ்திரமாக இருப்பது பிப்ரவரி 24ம் தேதி. அன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஆகும். சசிகலா விடுதலை செய்யப்பட்ட அதேநாளில் தான் ஜெயலலிதாவின் சமாதி திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து சில மணிநேரங்களில் சமாதி மீண்டும் அடைக்கப்பட்டுவிட்டது. ஆனால் வரும் 24ம் தேதி ஜெயலலிதாவின் சமாதி நிச்சயமாக திறக்கப்படும். காரணம், அதிமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதனால் நிச்சயம் வரும் பிப். 24ம் தேதி ஜெயலலிதாவின் சமாதி திறக்கப்படுவது உறுதி. அங்கு சென்று ஜெயலலிதாவின் சமாதிக்கு மரியாதை செலுத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிறகு செய்தியாளர்களை சந்திக்கும் அவர், முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து ஊடகங்கள் பலவும் சசிகலாவின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனிக்க துவங்கும். செய்தியாளர்கள் சந்திப்பு, பொதுகூட்டங்கள், கட்சிப்பணி என சசிகலா பரபரப்பாக இயங்குவார் என தெரிகிறது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம். இதனால் சசிகலா பக்கம் சாய விரும்புவர்கள் அதிரடியான முடிவுகளை எடுக்கலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. அதிமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து சசிகலாவை சந்திப்பார்கள், இதனால் அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் உருவாகலாம் என விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.

தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அதிமுக-வை தன்வசப்படுத்தும் சட்ட நடவடிக்கைகளில் சசிகலா தீவிரம் காட்டுவார் என்பது உறுதி. தவிர, தேர்தல் காலம் நெருங்கி வருவதால் பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதாவை குறித்து பேசி மக்களின் ஆதரவை அவர் எளிதாக பெற்றுவிட முடியும். அதே சமயத்தில் சசிகலாவிடம் ஐக்கியமாகும் அதிமுக-வின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறே இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கங்களை வைத்து, தனக்கான அரசியல் நகர்வுகளை சசிகலா அரங்கேற்றுவார் என்கிறார்கள் பிரபல அரசியல் விமர்சகர்கள்.

 

 

No comments