திமுக கூட்டணிக்குள் உரசல்! கமல் புது வியூகம் அமைக்க வாய்ப்பு!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கேட்டு, கட்சித் தலைமை நிர்பந்தித்து வருகிறதாம். இதனால் தற்போது இருக்கும் திமுக கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என அரசியல் நோக்கர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

திமுக கட்சியுடன் தற்போது காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேறக் கழகம், இடதுசாரிகள், மமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. இவை அனைத்தும் திமுக தலைமையில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போல தாராளம் காட்டாமல், தொகுதி பங்கீட்டில் ஜெயலலிதா போல நடந்துகொள்கிறாராம் ஸ்டாலின். ஒருவேளை தேமுதிக மற்றும் மநீம கட்சிகள் ஐக்கியமானால் தொகுதி பங்கீடுக்கான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளலாம் என திமுக-வின் வியூகம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் திமுக உடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள், தொகுதி விஷயத்தில் அதிருப்தியாகவே உள்ளன.


அண்மைக் காலமாக செய்தியாளர்கள் முன்னிலையில் பேசும் போது மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ தொகுதி பங்கீடு குறித்து வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவிக்கிறார். திமுக கட்சி கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை தான் ஒதுக்கும். பெரியளவில் பதவி ஆசைகளை யாருக்கும் வேண்டாம். இதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்கிறார் வைகோ.

வைகோ இப்படி பேசி வருவது திமுக- தலமையை டென்ஷாக்கி வருகிறது. மேலும், திமுக கூட்டணி தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் பிரஷாந்த் கிஷோர் தலமையிலான குழு, திமுக கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்பது கட்சிக்கு வலுசேர்க்கும், வாக்கு எண்ணிக்கையும் உயரும் என நம்புகிறார்கள். திமுக தலைமையின் விருப்பமும் அதுவே. தவிர, கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நின்றால் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கவும் திமுக தயாராகவுள்ளது என்பது இங்கே கவனிக்க வேண்டியது.

அவ்வப்போது வைகோ திமுக-வின் இந்த முடிவு மீது அதிருப்தியை தெரிவித்தாலும். அவர் கள எதார்த்தம் புரிந்தே பேசுவதாக தோன்றுகிறது. மாறிவரும் சூழலில் இந்த தேர்தலை அவர் தவறவிட்டால், மதிமுக-வை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு கைகழுவிபோனதாகவே ஆகிவிடும். ஆனால் திமுக-வின் இந்த முடிவு இடதுசாரிகளை தான் மிகவும் கொதிப்படையச் செய்துள்ளது. உதயசூரியன் சின்னத்தில் இடதுசாரிகள் போட்டியிடுவது கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இதை இடதுசாரிகளின் தலைமையும் தொண்டனும் துளியவு கூட ஏற்கமாட்டார்கள் என்கிறார்கள் தோழர்கள்.

கூட்டணி கட்சிகளின் எண்ணவோட்டத்தை திமுக அறிந்திருந்தாலும், கண்டும் காணாமல் உள்ளது. ஒருவேளை பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கினால் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை அது நடைபெறாமல் போனால், பிடித்த பிடிவாதம் பிடித்தது தான் என்கிறார்கள் கழக கண்மணிகள். ஸ்டாலினைக் காட்டிலும், மற்ற திமுக கட்சியினர் நிச்சயம் இம்முறை ஆட்சி அமைக்கவேண்டும் என்கிற முனைப்போடு இருப்பதால், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை கிடப்பில் போடப்படுவது உறுதி என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. 

 

No comments