தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம்

ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப்

பெருமன்றத்தின் தலைவராகவும் திகழ்ந்த தா.பாண்டியன் அவர்கள் 26.02.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கின்றது.

தமிழகத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக, சிறந்த பொதுவுடமைக் கருத்தியல் சிந்தனையாளராக, தமிழின உணர்வாளராக சிறந்த பேச்சாளராக, வலிமையாக தன் வாதத்தை மக்களிற்காக முன்வைத்து வாழ்ந்தவர்.

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர்.

2008ஆம் ஆண்டிற்குப்பின் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக் காலங்களில் , தமிழகத்தின் பலகட்சித் தலைவர்களையும் இணைத்துப் பல போராட்டங்கள் ஊடாக இந்திய அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் நெறிப்படுத்தி, ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக குரல்கொடுத்துப் பலமாகப் போராடிய பொதுவுடமைச் சிந்தனையாளர்.

ஈழத்தமிழர்களிற்காக 2012ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடாத்தப்பட்ட அனைத்துலக ஈழத்தமிழர் மகாநாட்டில் கலந்துகொண்டு “ஈழத்தமிழர்களிற்கு இடம்பெற்றது இன அழிப்பு!” என்று ஆதாரங்களோடு எடுத்துக்கூறி, மனித உரிமைக்காகவும் மக்கள் விடுதலைக்காகவும் போராடியவர்.

ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்தவரும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடும் இனங்களிடமும் தமிழின அழிப்பை எடுத்துச்சென்றவருமான      தா.பாண்டியன் ஐயா  அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்,நண்பர்களின் பிரிவுத்துயரில்  நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’


அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.No comments