தமிழீழ எல்லையை மீண்டும் நிலைநாட்டிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரை! பனங்காட்டான்


சிங்கள பௌத்த பேரினவாதம் சர்வாதிகார சட்டத்தின் துணைகொண்டு துண்டாடிய தமிழீழம் என்னும் தமிழர் தாயகத்தை, உறுதியாலும் உணர்வாலும் இந்தப் பேரணி இணைத்துள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளால் நினைத்துப் பார்த்திருக்க முடியாத செயற்கரிய காரியத்தை தமிழர் குடிசார் சமூக அமைப்புகள் தடையுடைத்து சாதித்துள்ளன. தமிழர்களின் நீதி கேட்கும் இந்தப் பேரணி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கவனத்தை முதல்நாளே பெற்றுவிட்டதென்பதை அங்கிருந்து வெளிவந்திருக்கும் அறிக்கை தெரியத்தருவது இதற்கான முதலாவது அங்கீகாரம்.

ஜனநாயக சோசலிச ஆட்சி என்ற பெயரில் தனிநபர் அதிகார அடக்குமுறை ஆட்சி எவ்வாறு இயங்கும் என்பதற்கு இலங்கை இப்போது சரியான உதாரணமாகியுள்ளது. 

அரசியல் அறிவின்றி, ஆயுதம் மட்டுமே ஏந்திப் பழகிய ஒருவர் அரசியல் அமைப்பு ரீதியான ஜனாதிபதி என்ற சிம்மாசனத்தில் அமர்ந்தால் எதுவெல்லாம் நடக்குமோ அதுவே இப்போது நடைபெறுகிறது. 

சில வாரங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சி எம்.பி.யான ஹரின் பெர்னாண்டோவை கோதபாய ராஜபக்ச எச்சரித்தபோது அவர் சுட்டிய முள்ளிவாய்;க்கால் படுகொலைச் சம்பவம், அவரது கரங்களில் இப்போதும் அந்தக் கொலை ஆயுதம்தான் இருக்கிறது என்பதை பகிரங்கப்படுத்தியது. 

அந்த ஆயுதத்தினால் சர்வதேசத்தையும் தனக்கு வாக்களித்து பதவி கொடுத்த மக்களையும், பிறப்புரிமை கேட்டு நிற்கும் சிறுபான்மையினரையும் தொடர்ந்து அடக்க முடியாதென்பதை இப்போதைய தொடர் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து முன்னெடுக்கும் முயற்சிகள் முள்ளிவாய்க்காலை மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாக அனைத்து போர்க்குற்றங்களுக்கும் சர்வதேச பொறிமுறையுடன் கூடிய பொறுப்புக்கூறலையும் நீதிவிசாரணையையும் கேட்கிறது. 

இந்த மாத இறுதியில் ஆரம்பமாகும் ஜெனிவாவின் 46வது கூட்டத்தொடரில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை இலங்கை அரசுக்கு எதிரானைவையென்று பொதுப்பட சொல்ல முடியாது. போர்க்காலத்தில் ஆட்சியிலிருந்த ராஜபக்சவினருக்கு எதிரானது என்றே சொல்ல வேண்டும். 

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்து நிற்கும் இலங்கை, கொழும்பு துறைமுக கிழக்கு முனையை அந்நாட்டுக்கு வழங்க ஏற்கனவே ஒப்புக்கொண்டதிலிருந்து தவறியதால் புதுப்பிரச்சனையை எதிர்கொள்கிறது. ஆட்சித்தரப்பிலிருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களின் எதிர்ப்புக்கும், துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டுப் போராட்டங்களுக்கும் அடிபணிந்து இந்தியாவை பகைத்துள்ளது. 

நேரடியாக இத்தோல்வியை ஏற்றுக்கொள்ள திராணியற்ற கோதபாய மெதுவாக பந்தை தமது தமையனாரான மகிந்தவிடம் தள்ளிவிட்டு, எதிர்ப்புகளிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டுள்ளதாக எண்ணுகிறார். ஆனால், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவு தாமதமின்றி கோதபாய, மகிந்த மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரைச் சந்தித்து தமது அரசின் எதிர்ப்பை நேரடியாகத் தெரிவித்துள்ளார். 

இது போதாதென்று, தெற்கில் சிங்கள பௌத்தத்தின் காவலர்களென தம்மைக் கூறிக்கொள்ளும் தேசிய பிக்குகள் முன்னணி, கோதபாய மீதான தங்களின் கடுமையான எதிர்ப்பை ஊடக சந்திப்பின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது. நாட்டை நிர்வகிக்க தகுதியற்றவர் கோதபாய என்று கோடு காட்டியுள்ள இந்த அமைப்பின் செயலாளர் வக்கமுல்லே உதித தேரர், இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே கோதபாய லாயக்கானவரென்று நையாண்டி பண்ணியுள்ளார். (இதைத்தான் தமிழர்கள் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகின்றனர்).

முக்கியமாக, கோதபாயவினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் விசித்திரமாக உள்ளனவெனவும், மக்களின் நகைப்புக்கிடமான ஒருவராக (கோமாளியாக) இவர் காணப்படுவதாகவும் தேரர் தெரிவித்திருப்பது முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் 1959ம் ஆண்டை நினைவுபடுத்துகிறது. 

தர்மி~;டர் என்று பட்டம் பெற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது அவரை சர்வாதிகாரியென்று ஒரு கட்டத்தில் அவர் சார்ந்த சமூகத்தினரே அடையாளப்படுத்தியிருந்தனர். ஆனால், கோதபாயவை அவரின் ஒரு வருட பதவிக்கால முடிவிலேயே அவரைத் தெரிவு செய்த பௌத்தவாதிகள் நகைப்புக்கிடமானவர் என்று காட்டுகின்றனர். 

கோதபாயவின் உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவமொன்று இந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது. சிங்கள தேசம் சுதந்திர நாளைக் கொண்டாடுவதற்கு முதல்நாள் கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன்னால் இந்த எரிப்பு இடம்பெற்றது. பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டியதை வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் இதனைச் செய்தனர். (இதே பல்கலைக்கழக மானிய ஆணையமே கடந்த மாதம் 8ம் திகதி யாழ். பல்கலைக்கழக வளவில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்புக்கு உத்தரவிட்டதை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.) 

தெற்கில் ஏற்பட்டிருக்கும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கெதிரான செயற்பாடுகளின் இன்னொரு வடிவமாக, தமிழ் மக்களுக்கு நீதி கேட்கும் வடக்கும் கிழக்கும் இணைந்த நடவடிக்கையாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை நோக்கலாம். 

தமிழர் பிரதேச குடிசார் (சிவில்) சமூக அமைப்புகளால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாட்டில் தமிழர் அரசியல் கட்சிகள் எதற்கும் நேரடிப் பங்கிருக்கவில்லை. அந்த வகையில், இது அரசியலைப் பின்தள்ளி மக்களுக்கான நீதியை மக்களே கோரும் ஒரு நடவடிக்கையாக அமைந்தது. 

வழக்கமாக வடக்கிலிருந்தே கிழக்கு நோக்கி பேரணிகள் செல்வதுண்டு. சில பேரணிகள் அனுரதபுரம், கொரவப்பொத்தான போன்ற சிங்களப் பிரதேசங்களில் தாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பேரணி கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி ஆரம்பமானது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் ராஜபக்சக்களின் ஆட்சியும்,  அவர்களின் கூலிப்பட்டாளமாகச் செயற்படும் ராணுவமும் பொலிசும் இதனை எழுதும் இரண்டாம் நாளில்கூட மேற்கொள்கின்றன. 

நீதியை நீதியாக வழங்க முடியாத நீதிவான் மன்றங்கள் தமிழர்கள் விடயத்தில் வழக்கம்போல அரசாங்கத்துக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்குகின்றன. தியாகி திலீபன் நினைவுநாள், மாவீரர் வணக்க நாள் போன்றவைகளின்போது பொதுவில் ஏற்கப்படாத காரணங்களை முன்வைத்து நீதிமன்ற தடைகளைப் பெற்ற பொலிசார், தமிழர் வாழ்விடங்களில் ராணுவ பலத்துடன் மக்களின் உரிமைகளை தடை செய்து வருகின்றனர். 

இப்போது அதே வழியைப் பின்பற்றி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கும் தடைகள் பெறப்பட்டன. சாத்வீக ரீதியான பேரணிக்கு சத்தியக்கடதாசிகளையும், கொரோனா பயமுறுத்தல்களையும் காரணங்காட்டி தடை பெறப்படும் விநோதம் தமிழர் தாயகப் பூமியில்தான் இடம்பெறுகிறது. 

கொழும்பு துறைமுக ஊழியர்கள் கிழக்கு முனையை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை தலைநகரில் மேற்கொண்டனர். அதற்குத் தடையில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் கோதபாயவின் உருவ பொம்மையை (கொடும்பாவி) வீதியில் வைத்து எரித்தனர். அதற்குத் தடையில்லை. அங்கு கொரோனாவும் இல்லை. 

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி அரசியலுக்கு அப்பாற்பட்டது. குடிசார் சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு தொழிற்சங்கங்களும், யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் தங்கள் தார்மிக ஆதரவை இதற்கு வழங்கியுள்ளனர். பாடசாலைகள் எதுவும் மூடப்படவில்லை. அரசாங்க பணிமனைகளில் வேலைகள் தடுக்கப்படவில்லை. பொதுப் போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்படவில்லை. ஆனாலும், இப்பேரணி இடம்பெற அனுமதிக்க முடியாதென்பது ராணுவ ஆட்சி நடத்துபவர்களின் முடிவு. 

அதனால் வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பேரணிக்கான தடையுத்தரவை பொலிசார் பெற்றுள்ளனர். அதனையும் மீறி முதல் நாள் பேரணி கொட்டும் மழையிலும் பொத்துவிலி;ல் ஆரம்பமாகி தாழங்குடா வரை சகல தடைகளையும் தகர்த்தெறிந்து சென்றுள்ளது. 

முஸ்லிம் கிராமங்க;டாக பேரணி சென்றபோது பல நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் - குறிப்பாக இளம்பராயத்தினர் கோசங்கள் எழுப்பியவாறு இதில் கலந்து கொண்டது நிகழ்கால அரசியல் போக்கில் ஒரு திருப்புமுனை. 

அதேசமயம், சில அரசியல்வாதிகள் இந்தப் பேரணியை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து தமிழர் விவகாரங்களில் துணிச்சலுடனும் ஓர்மத்துடனும் செயற்படும் இரா. சாணக்கியன், தமது உருவப்படம் பொறித்த பதாதையை தவிர்த்திருக்க வேண்டும். இவரது செயற்பாடு இப்பேரணி குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியால் ஏற்பாடானது என்ற தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டது. 

கிழக்கிலுள்ள நீதிமன்றங்களில் பேரணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்காக அங்கு செல்வதாகக் கூறிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் அதனைச் செய்யாது, பேரணியின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஊடகங்களுக்கு செவ்வி அளித்து, தாமே அதனை ஏற்பாடு செய்தவர்போல காட்சி கொடுத்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். 

கடந்த வருட பொதுத்தேர்தலில் கற்றுக்கொண்ட பாடத்தின் படிப்பினை இதுவென்று புலம்பெயர்ந்த நாட்டு வானொலியொன்று சுமந்திரனின் ஷபப்ளிசிட்டி| நடவடிக்கையை விமர்சனம் செய்தது. குடிசார் சமூகமே இந்தப் பேரணியை ஏற்பாடு செய்ததென்பதை இவரது செயற்பாடு மாற்றுவதாக அமைந்தது. 

அடுத்தடுத்த நாட்களில் பேரணியைத் தொடர்ந்து மேற்கொண்டு, திட்டமிட்டவாறு ஆறாம் திகதி பொலிகண்டியில் முடிவுபெற சிங்கள அரசும் அதன் கூலிப்பட்டாளமும் இடமளிக்குமா என்ற கேள்வி இதனை எழுதும்போது எழுகின்றது. அந்தளவுக்கு பொலிசாரும் நீதிமன்றங்களும் இணைந்தே பணியாற்றுகின்றன. 

பேரணி பொலிகண்டியை சென்றடைந்தால் தடை உடைத்த வெற்றியுண்டு. தடையை மீறி செல்ல முடியாது போனால் அதுவும் வெற்றிதான். அதாவது - வடக்கும் கிழக்கும் இணைந்த வெற்றி. தமிழ் பேசும் மக்கள் மதத்தால் வேறுபட்டாலும் உணர்வாலும் உரிமைக் குரலாலும் ஒன்றுபட்டார்களென்ற மற்றொரு வெற்றி. 

தமிழர் தேசம் என்பது ஒன்றுபட்ட தமிழ் பேசும் மக்களின் நிலப்பரப்பு என்பதை இந்தப் பேரணி நிரூபித்துள்ளது. 

தமிழர்களின் நீதி கேட்கும் இந்தப் பேரணி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கவனத்தை முதல்நாளே பெற்றுவிட்டதென்பதை அங்கிருந்து வெளிவந்திருக்கும் அறிக்கையும், பேரணியில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பை பேரவை வலியுறுத்தியிருப்பதும், ஒன்றுபட்ட தமிழ் பேசும் மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள தனித்துவ அங்கீகாரம். 

No comments