கோதா: நானே கொன்றேன்! பனங்காட்டான்


தமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் - நந்திக் கடல் முகத்தை காட்டவா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவை பயமுறுத்தியவர், சரணடைந்த விடுதலைப் புலிகளை தாமே கொன்றதாக ஸ்ரீபன் ராப் அவர்களிடம் 2014ல் நேரடியாகக் கூறியதை ஏழாண்டுகளின் பின்னர் ஒப்புக்கொள்ள ஏன் அச்சப்படுகிறார்? 

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினது 46வது கூட்டத்தொடர் இந்த மாதம் 22ம் திகதி ஆரம்பமாகிறது. இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீது நடத்திய கொடூர யுத்த போர்க்குற்ற மற்றும் பொறுப்புக்கூறல் விடயம் இந்த அமர்வில் காத்திரமானதாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக தயாரித்த அறிக்கை சுட்டியுள்ள காரமான கருத்துகளும் இறுக்கமான பரிந்;துரைகளுமே முன்னைய ஆண்டுகளிலும் பார்க்க இம்முறைக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

2015ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 30:1 இலக்கத் தீர்மானமும், 2019ம் ஆண்டின் 40:1 இலக்கத் தீர்மானமும் இலங்கை அரசினால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், இந்த மாதக் கூட்டத்தொடர் அடுத்தது என்ன என்ற பெருங்கேள்வியுடன் ஆரம்பமாகவுள்ளது. 

கொரோனா இடர்காலமாதலால் இணையவழி நேரலை வழியாகவே அமர்வு இடம்பெறும். இலங்கை மீது சர்வதேச குற்றவியல் நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழர் தரப்பு எழுத்து மூலம் கோரியுள்ளது. இதனை மனித உரிமை ஆணையாளரும் உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரை செய்துள்ளார். 

கோதபாயவின் தற்போதைய ஆட்சித்தரப்பு ஜெனிவா அறிக்கையை தூக்கி வீசி விட்டது. தனது நேச நாடுகளின் உதவியைப் பெற தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் நிலைப்பாட்டை 23ம் திகதி வெளிவிவகார அமைச்சர் அமர்வின்போது வெளிப்படுத்துவார். 

மாறிவரும் பூகோள அரசியல் இலங்கை விவகாரத்தில் எவ்வகையான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால், இவ்வமர்வின் முக்கிய கருவாக கோதபாய ராஜபக்ச தெரிவித்த - தெரிவித்து வரும் கருத்துகளும் சர்வதேச விவகார பிரமுகர்கள் கோதபாயவின் கூற்றுகளை அம்பலப்படுத்தி வரும் சம்பவங்களும்  கவனிக்கப்படும். 

இதன் மையப் புள்ளியில் இப்போது நிற்பவர் ஸ்ரீபன் ராப். அமெரிக்க அரசமைப்பின் பல கட்டுமானங்களில் முக்கிய இடம் வகித்த இவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் துணைத்தலைவராக இருந்தவர். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் இரண்டு தடவைகள் நேரடியாக அங்கு விஜயம் செய்து பல தரவுகளை சேகரித்தவர். 

சில நாட்களுக்கு முன்னர் இணையவழி நேரலையாக இடம்பெற்ற இலங்கை விவகார கருத்தரங்கொன்றில் பங்குபற்றிய ஸ்ரீபன் ராப், தாம் இலங்கைக்கு விஜயம் செய்த வேளையில் பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோதபாய ராஜபக்ச தம்மிடம் தெரிவித்த ஒரு விடயத்தை கோதபாயவின் வார்த்தையில் அப்படியே வெளிப்படுத்தினார். 

சுமார் 360 வரையான விடுதலைப் புலிப் போராளிகள் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டது பற்றி அவரிடம் தாம் கேட்டபோது, 'ஓ! விசாரணைகள், விசாரணைகள் - அவைகள் நீண்டகாலம் இழுபட்டுச் செல்லும். அவர்கள் தப்பி விடுவார்கள்" என்று கூறிவிட்டு, 'நான் அவர்களைக் கொன்றுவிட்டேன், நான் அவர்களைக் கொன்றுவிட்டேன், நான் அவர்களைக் கொன்றுவிட்டேன்" என்று கோதபாய தெரிவித்ததாக ஸ்ரீபன் ராப் தெரிவித்தார். 

இந்தக் கூற்று  மறுநாளே சர்வதேச செய்தியாகி அனைவரையும் பரபரப்பாக்கியது. அடுத்த 24 மணித்தியாலங்களில் கோதபாயவின் ஜனாதிபதி செயலகம் இதற்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை விட்டது. ஸ்ரீபன் ராப்பிடம் அப்படியாக கோதபாய எதுவும் சுறவில்லையென்றும், ஏழு வருடங்களின் பின்னர் அவர் இவ்வாறு கூறுவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. 

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ஸ்ரீபன் ராப் அங்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபராகவிருந்த வண.பிதா பிரான்சிஸ் ஜோசப் தலைமையில் பல பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட சரணடைந்த எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

2018 மார்ச் 19ம் திகதி இக்கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்க அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றபோது அவரது விஜயத்தை எதிர்த்த கல்லூரிச் சமூகம், எங்கள் அதிபர் எங்கே என்ற பதாகையுடன் நின்றது. வண.பிதா பிரான்சிஸ் ஜோசப் தலைமையில்தான் பல பேருந்துகளில் சரணடைந்த போராளிகள் ராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டனர். 

பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட மூத்த தலைவர்களான யோகி, திலகர், பாலகுமார், அவரது மகன், பரா, புதுவை இரத்தினதுரை, அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் உட்பட பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இவர்கள் எவரும் இப்போது உயிருடன் இல்லையென்றே தெரியவருகிறது. 

இவர்களுக்கு ஒரு நாள் பிற்பகல் வழங்கப்பட்ட பழங்களில் நஞ்சூட்டப்பட்டதாக ஒரு தகவல். வடமாகாண முதலமைச்சராகவிருந்த சி.வி.விக்னேதஸ்வரன் அவ்வேளை இதுபற்றி ஸ்ரீபன் ராப்பிடம் தகவல் தெரிவிக்கையில், 104 போராளிகளுக்கு நஞ்சூட்டப்பட்டதாக தெரிவித்தது பதிவில் உள்ளது. 2018ம் ஆண்டு கிடைத்த இன்னொரு தகவலின்படி 2009 மே மாதத்தில் சரணடைந்த சுமார் 500 போராளிகள் காணாமல் போனது தெரியவந்தது. 

ஸ்ரீபன் ராப் தமது இலங்கை விஜயத்தின்போது அன்றைய மன்னார் ஆயர் மேதகு ராயப்பு ஜோசப் அடிகளாரைச் சந்தித்து பல முக்கிய தகவல்களை பெற்றவர். மெனிக் பாம் அகதிகள் முகாம், புதுமாத்தளன் பகுதி, அந்தோணி திடல் போன்ற இடங்களுக்குச் சென்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் சந்தித்து உரையாடியவர். 

இதுபற்றி கோதபாயவிடம் ராப் வினவியபோது, போர் நடத்த இடத்தில் காணப்பட்ட அனைவருமே போராளிகள் என்று கண்மூடித்தனமாக அவர் அளித்த பதிலும் பதிவிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் n~ல் தாக்குதலால் மரணித்ததை ராப் நேரடிச் சாட்சியங்க;டாகப் பெற்றுக் கொண்டார். 

2014ம் ஆண்டு ராப் இலங்கை விஜயம் மேற்கொண்டபோது ராஜபக்சக்களின் பின்பலத்தில் சிங்கள இனவாதிகளும் பௌத்த பிக்குகளும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

2015ல் இலங்கையின் இணைஅனுசரணையுடன் 30:1 தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில், கோதபாய ராப்பிடம் கூறிய 'நான் அவர்களைக் கொன்றுவிட்டேன்" என்ற வாக்குமூலம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கலாமென்ற சந்தேக அச்சம் இலங்கை அரசுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. 

கோதபாயவின் யுத்த மோகம், ஆயுத கலாசாரம், கொலை வெறி, இரட்டை முகம் என்பவற்றுக்கு பல சாட்சியங்கள் உண்டு. இவர் பாதுகாப்பு செயலாளராகவிருந்தபோது யுத்தத்தின் ராணுவத் தளபதியாகவிருந்தவர் சரத் பொன்சேகா. யுத்த முடிவின் பின்னர் ஷயார் யுத்த நாயகன்| என்ற நீயா நானா போட்டியால் இவர்களுக்குள் பிளவு ஏற்பட்டது. ஒரு கட்டத்;தில் 'புலிகளை சுட்டுத் தள்ளுங்கள்" என்று கோதபாய உத்தரவிட்டதை சரத் பொன்சேகா அம்பலப்படுத்தினார். 

இதுபற்றி 2010ல் பி.பி.சி.யின் ஷஹாட் ரோக்| தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கோதபாயவிடம் கேட்கப்பட்டபோது, 'சரத் பொன்சேகாவை தூக்கிலிடுவோம்" என்று கனல் பறக்க பதிலளித்தார். 

சில வாரங்களுக்கு முன்னர் மற்றொரு சம்பவம். எதிர்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ கோதபாயவை ஜனாதிபதி என்று விளிக்காது உதாசீனப்படுத்தியதாக குற்றச்சாட்டு. 

இதனால் சீற்றம் கொண்ட கோதபாய அம்பாறையில் பகிரங்க வைபவம் ஒன்றில் உரையாற்றுகையில், தமக்கு இரட்டை முகம் உண்டென்று கூறி ஹரின் பெர்னான்டோவின் உயிருக்கு எச்சரிக்கை விடுத்தார். 

நந்திக் கடலில் பிரபாகரனை நாய் போல இழுத்து வந்ததை தமது வீரச் செயலுக்கான உதாரணமாகக் கூறி, அவ்வாறு மீண்டும் தன்னைப் பார்க்க விருப்பமா என்ற பாணியில் கோதபாயவின் எச்சரிக்கை அமைந்தது. அதாவது, தம்மை ஒரு கொலைகாரனென்று அவரே எடுத்துச் சொன்னதாக இந்தக் கூற்று அமைந்தது. (இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் கோதபாய ஆட்சியிலுள்ள பொலிஸ்மா அதிபரிடம் தமது உயிருக்கு பாதுகாப்பு தருமாறு ஹரின் பெர்னான்டோ வேண்டுகோள் விடுத்தது).

நான் எதற்கும் தயாரான ஒருவன் (ஐ யஅ ய உhயசயஉவநச pசநியசநன கழச யலெவாiபெ) என்ற ஜனாதிபதி கோதபாயவின் எச்சரிக்கைக் குரல், அவரை முன்னைய துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புச் செயலாளர் கோதபாயவின் இடத்துக்குக் கொண்டு சென்றதை இங்கு அவதானிக்க முடிந்தது.

நான் அவர்களைக் கொன்றுவிட்டேன்| என்று அடுத்தடுத்து மூன்று தடவைகள் கோபத்தின் உச்சியில் நின்றவாறு கூறியபோது, அதனை யாருக்கு கூறுகிறேன் என்று நிச்சயமாக அவர் அப்பொழுது எண்ணியிருக்க மாட்டார். அதனால்தான் தாம் அப்படிக் கூறவில்லையென்று பொய் சொல்ல நேர்ந்துள்ளது. அதற்கான தேவையும் அவருக்கு இப்போது உள்ளது. 

ஏழாண்டுகளுக்கு முன்னர் கோதபாய வழங்கிய வாக்குமூலத்தை, ஸ்ரீபன் ராப் சொல்ல வேண்டிய வேளையில் சொல்ல வேண்டிய முறையில் சொல்லியுள்ளாரென்றே கூறலாம். நுணலும் தன் வாயால் கெடும்!

No comments