இயக்கம்

அங்கும் இங்குமாக பாறைகளில் மோதி விழுந்து எழுந்து இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது குளத்து

நீருக்கு.

தன்னைப் போன்று நிலையாக இருந்து சுகமான வாழ்வை அனுபவிக்கத் தெரியாத ஆற்றுநீருக்கு யார்தான் புத்திமதி கூறப்போகின்றார்களோ என நினைத்துக் கொண்டது.

சோவென மாரி பொழிந்தது.

பெருக்கெடுத்து ஓடியது ஆற்று நீர். வெள்ளம் புகுந்து குளத்து நீர் நிரம்பி வழிந்தது.

எதிர்பாராமல் ஆற்று நீரும், குளத்து நீரும் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டன. குளத்து நீர் தன் நீண்டநாள் அவதானிப்பை வினாவாகத் தொடுத்து நின்றது.

"ஓரிடத்தில் என்னைப்போல ஆறஅமர இருக்காமல் உன் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருப்பதால் யாருக்கு என்ன பயன் உண்டாகப்போகின்றது?"

குளத்து நீரின் குறுகிய மனப்பாங்கை நினைத்து தனக்குள் நொந்து கொண்ட ஆற்று நீர் சொன்னது.

"நண்பா! நீ ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே தேங்கிக் கிடப்பதனால், உன் கரையை அண்டியிருக்கும் மரங்களுக்கும் சிறியதொகை மனிதர்களுக்கும் மட்டுமே உன்னால் பயன்படக்கூடியவாறு இருக்கின்றது.

நானோ என்னை வருத்தி, காடு மலையெல்லாம் தாண்டி வருவதனால், நான் போகுமிடமெல்லாம் நிலம் பூரித்துப் போகின்றது. மரங்களும், செடிகளும், கொடிகளும் செழித்தோங்கி வளர்கின்றன. பெருந்தொகையான மிருகங்களும் எண்ணிலடங்காத மனிதர்களும் தம் தேவைகளை நிறைவு செய்கின்றனர். என் வாழ்வோ முடிவுறாமல் நீள்கிறது"

குளத்து நீர் தன் அறியாமையை எண்ணி வருந்திக் கொண்டது.

"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது"

தலைவரின் கருத்துரையிலிருந்து

-சேந்தன்-

No comments