இணைவது வரலாற்றுக்கடமை:அரவிந்தன்!

 


தமிழ்பேசும் மக்களின் பூர்வீகத்தையே இல்லாது செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக அனைவரும் இணைந்து பேரணியில் கலந்துகொள்ளவேண்டும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ச.அரவிந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தமிழ் மக்களிற்கான அழைப்பினை விடுத்திருந்தார்.

தமிழ்பேசும் மக்களின் பூர்வீகத்தையே இல்லாது செய்யும் நோக்கத்துடன் அரசாங்கம் பல முயற்சிகளை செய்து வருகின்றது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரியும் பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றபோது அதற்கும் தடை ஏற்படுத்துகின்றது.

முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையை சீண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றது.

மேலும் வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை முறையினை சீரழிக்கும் வகையிலேயே அரசாங்கம் பல செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

இதற்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பெலிகண்டி வரையான போராட்டம் அரம்பிக்கப்பட்டு தொடர் போராட்டமாக பல தடைகளைத்தாண்டி முன்னோக்கி வருகின்றது.

இத்தகைய போராட்டத்திற்கு கட்சி இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

இத்தகைய போராட்டங்கள் முன்னெடுக்கின்றபோது தென்னிலங்கையில் இனவாத சாயம் பூசப்பட்டு எங்களது போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றார்கள்.

இத்தகைய திசை திருப்பும் செயற்பாடுகள் இன்று நேற்று அல்ல தந்தை செல்வா காலம்முதல் இது நடைபெற்றுத்தான் வருகின்றது.

எத்தகைய அழுத்தங்கள் தடைகள் இருந்தாலும் எங்களுடைய ஜனநாயக சாத்வீக வழியிலான போராட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றவண்ணமே இருக்கவேண்டும்.

பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட பேரணியை தடுக்க இன்றைய தினத்தில் அரச படையின் ஆதரவுடனும் வீதிகளில் ஆணிகளை எறிந்துள்ளதுடன் வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் கல் எறிகளும் நடந்துள்ளது.

எனினும் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் அதனையும் தாண்டி தங்கள் முயற்சியில் உறுதியாக இருந்து போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தை வலுச்சேர்க்கவேண்டும் .

இப்போராட்டமானது அரசியலுக்கானது அல்ல .வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒவ்வொரு இன மக்களுக்காகவும் எதிராக அரங்கேற்றப்படும் அநியாயங்களிற்கு எதிராக நடத்தப்படுகின்ற போராட்டம் .

எனவே இனபேதம் கடந்து இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அரவிந்தன் தெரிவித்தார்.


No comments