பேராயரிடம் பம்முகின்றது கோத்தா அரசு!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பாராளுமன்றத்தில் சபைப்படுத்த தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேற்படி அறிக்கையில் உள்ளவற்றை மறைக்கும் தேவை ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பேராயருடன் கலந்தாலோசித்த பின்னரே ஈஸ்டர் தாக்குதல்  தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி  இறுதி முடிவு எடுக்கப்படும்’ என கல்வி அமைச்சர் ஜி.எல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல் பற்றிய ஆணைக்குழு தொடர்பில் சமூகத்தில் இன்று கருத்தோட்டமொன்று உருவாகியுள்ளது.

அந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டபோது பல்வேறு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆணைக்குழு முன் பலர் வாக்குமூலம் அளித்திருந்தனர். இது ஒரு பிரிவு மாத்திரமே.

அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவினிடத்தில் மேலும் பலவற்றை எதிர்பார்த்தோம்.

இந்த தாக்குதலைத் தூண்டியோர், பணம் உதவி வழங்கியோர், அதற்கான உபகரணங்கள் பெற்றுக்கொண்ட விதம் குறித்து ஆராய்வதே நோக்கமாகவும் இருந்தது.

இது குறித்து உண்மையை அறிந்துகொள்ளவும் பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவருதலும் மிகமுக்கியாகும்.

அதுமட்டுமன்றி அதனைவிட மேலும் பல விடயங்கள் உள்ளன.

இதுபோன்ற இன்னுமொரு அழிவு மீள ஏற்படாத வகையில் அரசாங்கம் என்கிற ரீதியில் எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன? கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தீர்க்கமான முக்கிய விடயம் என்பதுடன் நாட்டின் பாதுகாப்பிற்கும் தாக்கம் செலுத்தக்கூடியதாகும்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மிகவும் பெறுமதிமிக்க கடமையொன்றை செய்தார். 250ற்கும் மேற்பட்டோர் பலியாகி 500ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தபோது கர்தினால் தலையிட்டிருக்காவிட்டால் இந்த நாடு இரத்தக் குளத்தில்தான் மிதந்திருக்கும்.

கர்தினால் தலையீடு செய்து ஆத்திரமடைந்தவர்களின் உணர்வுகளை அடக்கமுடிந்தது.

குறித்த ஆணைக்குழு தற்போது அறிக்கையை கையளித்துள்ளதுடன் அடுத்த கட்டம் என்ன என்பதே முக்கியமாகும். இதுகுறித்த அடுத்த கட்டத்தை கர்தினாலுடன் பேச்சு நடத்தியே எடுக்கவேண்டும்.

அவரது யோசனையும் அவசியம். இருந்த போதிலும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு சர்வமதத் தலைவர்களையும் இணைத்துக்கொள்வது அவசியமாகும்-என்றார்.

No comments