சிறை சலசலப்பிற்கு பயமில்லை!




தடையுத்தரவு பெறுவது, நீதிமன்றத்துக்கு இழுப்பது, சிறைக்கு அனுப்புவது என்ற சலசலப்புகளுக்கு அஞ்சி ஓடி ஒழியும் அரசியல்வாதி நானில்லை என தெரிவித்துள்ளார் மனோகணேசன்.

நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பெறப்படாத தடையுத்தரவுகள், பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துக்கொண்ட எம்.பிக்களுக்கு மாத்திரம் குறிவைத்துப் பெறப்படுகிறதென சபாநாயகர் மஹிந்த யாப்பாவிடம் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்டமைக்காக தன்னிடம் எதற்காக வாக்குமூலம் பெறப்பட்டதென பொலிஸ்மா அதிபரிடம் வினவி தமக்கு அறிவிக்குமாறும், மனோ சபாநாயகரிடம் இன்று (18) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்  கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுத் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மனோ எம்.பி,  “எதிரணி எம்.பிக்களுக்கு எதிராக மாத்திரம் பொலிஸார்  திட்டமிட்டு, நீதிமன்ற தடையுத்தரவுகளை பெறுகிறார்கள். எம்.பிகளாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் வருவது, அங்கு சபையில் உரையாற்ற மட்டுமல்ல. உண்மையில் அது 25 விகிதம்தான். எமது 75 விகித பணி, என்னை பொறுத்தவரையில், தெருவில், மக்கள் மத்தியில்தான் இருக்கிறது. ஆகவே பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எம்.பிக்களின் கடமையை செய்யும் சுதந்திரத்தை, சபாநாயகர்  உறுதிப்படுத்த வேண்டும்.

கொழும்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது, பெறப்படாத தடையுத்தரவுகள், ஏன் வட கிழக்கில் எமது மக்கள் போராட்டங்கள் நடைபெறும் போது மாத்திரம் பெறப்படுகிறது? 

தடையுத்தரவு பெறுவது, நீதிமன்றத்துக்கு இழுப்பது, சிறைக்கு அனுப்புவது என்ற சலசலப்புகளுக்கு அஞ்சி ஓடி ஒழியும் அரசியல்வாதி நானில்லை. இன்று இவர்களுக்கு விளக்க  வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றதால், இந்த பிரச்சினையை இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான் எழுப்பினேன்.“ எனவும் தெரிவித்துள்ளார். 

No comments