கோத்தாவின் புதிய கதை:புலிகள் வெளிநாடுகளிலாம்!புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக தெரிவித்திருந்த கோத்தபாய இப்போது கதையை மாற்றி சொல்ல தொடங்கியுள்ளார்.

புலிகளில் பலர் வெளிநாடுகளில் வேறுபெயர்களில் வாழவதாக தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என அமெரிக்காவின் யுத்தக்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளதை கோத்தபாய அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது.

இதேவேளை சரணடைந்த புலிகள் யாரும் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் விளக்கத்தை பெறமுயன்றவேளை ரப் தெரிவித்துள்ளமைக்கு எந்த ஆதாரமும் இல்லை என கோத்தா அலுவலகம் தெரிவித்தது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்தக்குற்ற விவகாரங்களுக்கான அலுவலகத்திலிருந்து ஓய்வுபெற்று ஏழு வருடங்களின் பின்னர் ஸ்டீபன் ரப், இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான நோக்கம் என்னவெனவும் ஜனாதிபதி அலுவலகம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரப் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி அலுவலகம், ஜெனிவா அமர்வை அடிப்படையாக வைத்தே ரப்,  இந்த அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியே இது என அலுவலகம் தெரிவித்துள்ளது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மோதல்களங்களில் கொலைகள் இடம்பெறவில்லை என அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக விளங்கிய லோரன்ஸ் ஸ்மித் என்பவர் தெரிவித்தார் எனவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரப் தனது பதவிக்காலத்தில் இலங்கை ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார் என குறிப்பிட்டாரா? 2015 ஜெனீவா அமர்விற்கு முன்னதாக ரப் இந்த விடயத்தினை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் பகிர்ந்துகொண்டாரா? என்பது குறித்து யுத்தகுற்றங்களிற்கான மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிக்கான அலுவலகம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் 12 ஆயிரம் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்தது எனத் தெரிவித்துள்ள அலுவலகம், இவர்களில் பலர் வெளிநாடுகளில் வேறுபெயர்களில் வாழ்கின்றனர் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.


No comments