முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு! கவலையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்த யேர்மன் மனிதவுரிமை ஆணையாளர்


யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டத்தை தொடர்ந்து யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கும் மற்றும் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , செயற்குழு அங்கத்தவர்களுக்கும்,மனிதவுரிமை அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் ஊடாகவும், தொலைபேசி உரையாடல்கள் ஊடாகவும் இவ் விடையத்தை கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதை தொடர்ந்து யேர்மன் மனிதவுரிமை ஆணையாளர் முனைவர் Bärbel Kofler அவர்கள் உட்பட மற்றும் இடதுசாரி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய முனைவர் Alexander Neu மற்றும் Michel Brandt அவர்களும் அத்தோடு ஏனைய உள்ளூராட்சி உறுப்பினர்கள் என பலர் தமது ஏமாற்றைத்தையும் மற்றும் கவலையையும், ஈழத்தமிழர்களுக்கான தமது தோழமையையும் தெரிவித்துள்ளனர்.

முனைவர் Alexander Neu ஏற்கனவே 5 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நாள் மே 18 நிகழ்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுடனும், முன்னால் யேர்மன் மனிதவுரிமை ஆணையாளருடனும் பல்வேறு அரசியல் சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்றாலும் பெரிய அளவில் சிறிலங்காவுக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் முன்வைக்கவில்லை, ஆனால் இன்று 10 வருடங்கள் கடந்து அந்த முயற்சி வீண் போகவில்லை என்பதை உணரமுடிகின்றது.

ஈழவிடுதலையை நோக்கிய போராட்டம் நீண்ட பாதையை கொண்டாலும் எமது முயற்சியை கைவிடக் கூடாதென்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

இத்தருணத்தில் சிறிலங்கா மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படவிருக்கும் 46வது மனித உரிமை கவுன்சிலின் அமர்வை நோக்கி, யேர்மனியில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகள், சங்கங்கள், தமிழ் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு மனு ஒன்றை கையளிக்க முன்னெடுப்புகள் நடைபெறுகின்றது.

அக் கடிதத்தில் பின்வரும் பிரதான கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது:

இப்புதிய தீர்மானத்தில், ஐநா பாதுகாப்பு சபை மற்றும் ஐநா பொதுச்சபை உட்பட ஏனைய ஐநா அமைப்புக்கள் இவ்விடயத்தை கையில் எடுத்து இதை மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் மன்றிற்கோ அல்லது வேறு பொருத்தமான சர்வதேச அணுகுமுறைகளிடமோ கையளித்து, இனவழிப்பு, மனித நேயத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள யேர்மன் அரசாங்கம் கேட்க வேண்டும்.

மேலே சொல்லப்பட்டது போல, மனித உரிமை கவுன்சிலின் தலைவர் சிறிலங்காவில் பொறுப்பு கூறல் என்ற விடயத்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு திரும்பவும் ஐநா பாதுகாப்பு சபையிடம் கையளிக்க வேண்டும்.

மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து கண்காணிக்கவும் அதற்காக சிறிலங்காவில் களத்தில் நின்று கண்காணிக்கவும் ஆவன செய்யும்படியும் யேர்மன் அரசாங்கம் கேட்க வேண்டும்.

மேலே முதலாம் நம்பரில் சொன்னதை மறுக்காமல், அதே நேரம் சிரியாவுக்காக ஐநா பொது சபையின் கீழ் அமைத்தது போன்ற ஒரு சுதந்திரமான விசாரணைக்கும் சாட்சிகள் சேகரிக்கவும் தீர்க்கமான ஒரு முறையை உருவாக்க வேண்டும்.

நடந்தவற்றிற்கு பொறுப்பு கூறலுக்கான ஒரு திடமான செயற்திட்டமும் அதற்காக இதை மேற்தளத்தில் உள்ள அமைப்புகளிடம் உயர்த்தவும் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

ஆக,யேர்மனிய அரசாங்கம் உறுதியான கால தாமதமற்ற நடவடிக்கையின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை மறுக்கப்படும் நீதி கிடைக்கப்பெற வலியுறுத்த வேண்டும்.

இக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க விரும்பும் தமிழ் அமைப்புகள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்.

ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி








No comments