குட்டி ஜனாதிபதி நாமல் சொன்னது கூட பொய்த்துள்ளது?இலங்கையில் தற்போது குட்டி ஜனாதிபதி போல் செயற்படும் நாமல் ராஜபக்ஸ கூட  அரசியல் கைதிகளை விடுவிப்பதான அறிவிப்பு வாக்குறுதியை வழங்கியிருந்தார். ஆனால் அது காற்றில் பறந்த வாக்குறுதியாகவுள்ளதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (02) இடம்பெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற ஒரு உறுதி மொழியைக் கூறி தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் வேலைகளை செய்தார்கள்.

ஆனால் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கைவிட்டு ஆட்சியைத் தொடர்வது போல் இந்த ஆட்சியிலும் உறுதி மொழிகளை மீறி தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் கொவிட 19 தாக்கத்திற்குள்ளாகியுள்ளார்கள். இந்த நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

அவர்களது உயிருக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டும். அதையும் மீறி சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகளுக்கு தற்போது கூட தொற்றுக்குள்ளாகி வருகிறார்கள்.

அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு அனைத்து தரப்பும் ஒன்று திரள வேண்டும். கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காககவுள்ளது.

அரசாங்கத்தின் மனங்களில் கைதிகள் விடயத்தில் மாற்றம் வரவேண்டும். அரசியல் கைதிகளுக்கு சிறைச்சாலையில் மரணங்கள் நிகழ்ந்தால் அரசாங்கம் முழுப்பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்.

இந்த விடயத்தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள மனிதவுரிமை அமைப்புக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசாங்கத்திற்கு உறைக்கும் வகையில் அழுத்தம´ கொடுக்கும் செயற்பாடுகளை அனைத்து தரப்பும் முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


No comments