தடைகளை உடைக்க வேண்டும்:சுதந்திர ஊடக இயக்கம்?



சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை கண்மூடித்தனமான முறையில் தடைசெய்யும் போக்கு குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கடும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியோர் கைதுசெய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக மேலும் கைதுகள் இடம்பெறும் என்றும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.


கடந்த 2020 நவம்பர் மாதத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் மற்றும் பரிமாற்றங்கள் தொடர்பாக ஏராளமான மக்கள் பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் ராசமாணிக்கம் இந்த விஷயத்தை டிசம்பர் 05 அன்று நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.


இதற்கிடையில், சமூக ஊடகங்கள் மூலம் கல்வி அதிகாரிகளை விமர்சித்தது தொடர்பாக ஜயவர்தனபுர பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியை  ஒருவரும் கடந்த வாரம் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 

தேசிய பாதுகாப்பு, தவறான செய்திகளைப் பரப்புதல், வெறுக்கத்தக்க பேச்சைத் தடுப்பது போன்ற காரணங்களுக்காக கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்தலாம். எனினும் இவை அனைத்தும் சட்டத்தின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும், மேலும் அரசியலமைப்பின் 14 வது பிரிவினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட, பல்வேறு தீர்ப்புகளால் நிறுவப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிப்பதற்கான மக்களின் உரிமையை மீறுவதாக அவை இருக்கக்கூடாது.

 

மேற்கண்ட சம்பவங்களில், பாதுகாப்புப் படைகள், காவல்துறை மற்றும் பல்வேறு அதிகாரிகள் சட்ட வரம்புகளை மீறும் வகையில் செயல்பட்டு சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைத் தடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பதை சுதந்திர ஊடக இயக்கம் அவதானித்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தவும், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை அரசியலமைபினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் உட்பட பொறுப்புவாய்ந்த அனைவரையும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது, மேலும் இந்த சாதகமற்ற போக்கை தோற்கடிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது..



No comments