இரண்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு!

வலி.மேற்கு பிரதேச சபையின் அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோது சபையின் செயற்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு

உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தே.ரஜீவன், சி.இதயகுமாரன் ஆகியோரே வெளிநடப்பு செய்தனர்.

மேற்படி பிரதேச சபையின் 35 ஆவது அமர்வு இன்று திங்கட்கிழமை உப தவிசாளர் வே.சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றது. தவிசாளரும் வழமையாக அமர்வில் பங்கேற்கும் சபைச் செயலாளரும் சுகயீனம் காரணமாக அமர்விற்கு வருகை தந்திருக்கவில்லை.

அமர்வின் முதல் செயற்பாடான கடந்த அமர்வின் அறிக்கை தொடர்பான விவாதத்தின்போது, அமர்வில் கலந்துரையாடப்படும் விடயங்கள் உரிய வகையில் அறிக்கையிடப்படுவதில்லை என உறுப்பினர் ரஜீவன் கருத்து முன்வைத்தார்.

சங்கானை பிரதம தபாலகத்திற்கு உரிய அளவுகளை மீறி வீதிப்பக்கம் முன்னோக்கியதாக மதில் அமைக்கப்படும் விடயம் கடந்த அமர்வில் பல உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டு இரு மணித்தியாலம் வரை விவாதிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அது தொடர்பாக ஒரு வசனம் கூட அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை எனவும் ரஜீவன் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பாக உறுப்பினர்களான ந.பொன்ராசா, ச.ஜெயந்தன், து.சுஜிந்தன், க.துளசி ஆகியோரும் கருத்து வெளியிட்டனர். அமர்வில் இடம்பெறும் விடயங்கள் அறிக்கையில் சேர்க்கப்படாத விடயம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது எனவும் சபை செயற்பாடுகள் தொடர்பாக பேணப்படவேண்டிய ஆவணமான அறிக்கையில் உள்ளதை உள்ளபடியே சேர்க்கப்படாமை ஆரோக்கியமான செயற்பாடு இல்லை எனவும் பொன்ராசா தெரிவித்தார்.

இதன்போது, குறித்த தபாலக விடயத்தில் சபையின் செயற்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்ட தே.ரஜீவன் மற்றும் இதயகுமாரன் ஆகியோர் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமும் அரச திணைக்களங்களுக்கு இன்னொரு சட்டத்தையும் சபை அமுல்படுத்துகின்றது எனக் குற்றம்சாட்டிவிட்டு சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். 

No comments