தமிழீழ ஆய்வு நிறுவனத்திற்கு முன்னோடி ரூட் சிறி


அப்பையா சிறிதரன்- ரூட் சிறி (ROOT SRI)

1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை இலங்கைத்தீவில்

எங்கும் வெடித்தபோது பல இளைஞர்கள் தம்மை நேரடியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். பல்கலைக்கழக பட்டதாரியான சிறி வளமான எதிர்காலத்தை தூக்கி எறிந்து விட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் (Jaffna University Graduates Association - JUGA)  நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இருந்த சிறிதரன் எமது தாய் மண் மீட்புக்கான மக்கள் போராட்டத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்றான பொருளாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.

1983 ஆகஸ்ட் அளவில் தமிழீழவிடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதர் அவர்கள் களத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த காலகட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் போராட்டத்தை  பல முனைகளில் முறியடிக்க பொருளாதார தடைகளை முன்னெடுக்கும் என முன்னுணர்ந்து மக்களைப் பாதிக்கும் உணவு உற்பத்தி தடைகளை கட்டவிழ்த்து விடும் என்பதனை முன்னிறுத்தி அதனை கப்டன் பண்டிதருடன் விவாதித்து முன்னெடுக்கப்பட்டவேலைத் திட்டமே பின்னர் “தமிழீழ ஆய்வு நிறுவனம்” (Research Organisation of Tamil Eelam – ROOT)  என்ற விஸ்வரூப வடிவத்தைப் பெற்றுக்கொண்டது. உணவு உற்பத்தி, கைத்தொழில் மேம்பாடு, மாற்று சக்தி வலு உட்பட பல்வேறு அத்தியாவசியமான உள்ளூர் உற்பத்திகள் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச்செல்லப்பட்டது.

1985 ஜனவரி கப்டன் பண்டிதரின் வீரச்சாவின் பின்னர் யாழ் மாவட்ட தளபதி கிட்டு அண்ணாவின் ஆலோசனையின்படி பின் தளமாகிய தமிழ்நாட்டிற்கு சிறியும், ரவியும் சென்று தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில் தமிழீழ ஆய்வு நிறுவனம் (ROOT)  என்ற முறையமைக்கப்பட்ட மக்கள் கட்டமைப்பை உருவாக்கி பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு செல்லும் வரை 1985 ஏப்ரல் - மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட “களத்தில்” பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பணியாற்றினார்.

1985 காலப்பகுதியில் அரசியல் பொறுப்பாளர்களின் மாதாந்த ஒன்றுகூடலின்போது கிட்டண்ணாவின் ஏற்பாட்டில் அரசியல் வகுப்புகள் எடுத்த ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார்.

தமிழ்நாட்டு அரசினதும் மக்களினதும் பெரும் ஆதரவுடன் அங்குள்ள பிரபலமான தொழில்நுட்ப முன்னோடி நிறுவனங்களில் சென்று ஆராய்ந்து விவசாயம், கால்நடை, கடற்தொழில், கைத்தொழில், உணவு பதனிடல் தொழிநுட்பம் மற்றும் மாற்று வலு உற்பத்தி (alternative energy technology) போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் நடைமுறைப்படுத்த ஏதுவானவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து போராளிகளுக்கு அதில் பயிற்சி கொடுத்து அவர்களை கொண்டே தாயகத்தில் சிறந்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து வடகிழக்கில் உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாக சபைக்கான விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுள் ஒருவராக சிறிநியமிக்கப்பட்டிருந்தார். 

மறுபடியும் ஏற்பட்ட போர் சூழலில் தமிழ்நாட்டிலிருந்த கிட்டு அண்ணாவினால் மேற்கொள்ளப்பட்ட போர் தவிர்ப்பு முயற்சிகளில் அவருக்கு பக்கத்துணையாக இருந்து அரசியல் ராஜதந்திர முனைகளில் செயற்பட்டவர்களில் இவரும் முக்கிய பொறுப்பு வகித்தார்.

அக் காலகட்டத்தில் கிட்டண்ணாவை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் ஆ..முஸ்தபா, முன்னாள் கல்வியமைச்சர் பதியுதீன்மொஹமட் போன்ற முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை கொண்ட முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி (Muslim United Liberation Front - MULF) சென்னையில் விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை குழுவிலும் அவர் கலந்து கொண்டார்.

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஆராய துறைசார் நிபுணர் குழு ஒன்று கிட்டு அண்ணாவால் உருவாக்கப்பட்டது. அதற்கான ஒருங்கிணைப்பில் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இந்தியா மத்திய அரசுடன் போர் தவிர்ப்பு பேச்சுவார்த்தை 1988 செப்டெம்பர் மாதத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு கிட்டண்ணா உட்பட தமிழ்நாட்டில் இருந்த போராளிகள் கைது செய்யப்பட்டு முதலில் சென்னை மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டு சிறைவாசம் அனுபவித்து 1990களின் முற்பகுதியில் ஏனைய போராளிகளுடன் விடுவிக்கப்பட்டார்.

அக் காலகட்டத்தில் தாயகத்தில் மீண்டும் ஆரம்பமாகிய போர்ச்சூழலில் ஏதிலிகளாக சிதறிய மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வு கழகத்தை (TRO) வழிநடத்தி சிறந்த பணிகளை மேற்கொண்டார்.

1990ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுதலைப் பணிக்காக தமிழ்நாடு செல்ல வேண்டி நேரிட்டதுடன் அவர் புலம்பெயர் நாட்டில் பிரித்தானியாவில் மீண்டும் தன் சமூகக் கடமைகளை கல்விச் செயல்பாடுகளினூடாக தொடர்ந்தார்.

1992 அளவில் TRTEC எனும் கல்வி நிறுவனத்தை பொறுப்பேற்று கணனி, ஆங்கிலம், கணக்கியல் போன்ற துறைசார் பயிற்சி நெறிகளை திறம்பட நடத்தி லண்டன் மாநகரில் மூன்று கிளைகளை நிறுவி ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளுக்கு பயிற்சியளித்து அவர்களை வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கினார். 

ஐரோப்பா மட்டத்தில் கணனிக் கல்வி சார்ந்த மாநாடொன்றை 1990களின் பிற்பகுதியில் வெற்றிகரமாக நடத்தினார். இதன் மூலம் கணனித்துறைசார் முக்கியத்துவத்தை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பினார். 

Child First (UK) என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் பிரதம இணைப்பாளராக 2009ஆம் ஆண்டிலிருந்து தாயகத்திலுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் சிறார்களுக்கு ஆரம்பக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கான நிதியுதவி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் வன்னியில் உள்ள மாணவர்களுக்கு கணணிப் பயிற்சியளிக்குமுமாக மூன்று மாடி கட்டிடம் விசுவமடுவில் அமைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. 

தையல் பயிற்சி, அழகுக் கலை, உணவு பண்டங்கள் தயாரிப்பு போன்ற பயிற்சி வகுப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிற்சிகளை முடித்து வெளியேறி சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தாயகமெங்கும் தெரிவு செய்யப்பட்ட வருடா வருடம் 250இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கான  நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

வறிய குடும்பங்களுக்கு உலருணவுபொதிகள் தேவை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.

தன் இளமைக் காலம் தொடங்கி நோய் வாய்ப்பட்டிருந்த வேளையிலும் தமிழ் மக்களுக்கும் தாயக மக்கள் நலனிற்காகவும் ஓயாது கடமையாற்றிய சிறி இனி அமைதியாக உறங்கட்டும். அவரைப் போன்ற பல சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்களை உருவாக்கி அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதுவே நாம் அவருக்குச் செய்யும் சிறந்த கௌரவமாகும்.

No comments