காணாமல் போன இளைஞன்! கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

 மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் பருத்தித்துறை வல்புரம் குறிச்சிப் பகுதியில் அவர் மீட்கப்பட்டார் என கூறியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன், தன்னை கும்பல் ஒன்று கடத்திச் சென்று தாக்கியதாக  தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கைநகர் பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞனின் குடும்பத்தினருக்கு சொந்தாமாக பிறிதொரு இடத்தில் இருக்கும் வயல் காணியில் ஒரு குழுவினர் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்

அதனால் மணல் கடத்தல்காரர்களுக்கும் காணி உரிமையாளருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

அந்நிலையில், மணல் கடத்தல் கும்பல் கடந்த சனிக்கிழமை மாலை காணி உரிமையாளரின் வீட்டிற்கு வாள்களுடன் சென்று மிரட்டிச் சென்றுள்ளனர்.

அதுதொடர்பில் கும்பலுக்கு எதிராக மிரட்டப்பட்டவரால் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும் பொலிஸார் உடனடி நடவடிக்கையை எடுக்கவில்லை.

இந்த நிலையில்  அன்றைய தினம் (சனிக்கிழமை) நள்ளிரவு மீண்டும் அந்த வீட்டிற்குள் வாள்களுடன் மணல் கடத்தல் கும்பல், வீட்டினுள் நுழைந்த வேளை வீட்டில் இருந்தோர், அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் புகுந்தனர். வீட்டினுள் புகுந்த கும்பல் வீட்டில்  இருந்த மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியது. 

அதன் பின்னர் குறித்த வீட்டார் தஞ்சமடைந்திருந்த அயல் வீட்டில் சென்று அங்கும் அத்துமீறி உள்நுழைந்த கும்பல் தஞ்சமடைந்திருந்தவர்களை தாக்க முற்பட்ட போது தடுக்க முற்பட்ட அந்த(அயல்) வீட்டைச் சேர்ந்த முதியவரை தாக்கியிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் சிங்கை நகர் வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த சின்னத்துரை துரைராசா (வயது 68) என்ற முதியவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு இடம்பெற்றுவரும் காணிக்கு சொந்தமான குடும்பத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை பிரதீபன் (வயது-24) என்ற இளைஞன் அன்றைய தினம் சனிக்கிழமை மாலை குடிதண்ணீர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமற்போயிருந்தார்.


அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை  வடமராட்சி முராவில் பகுதியில் மீட்கப்பட்டது. அந்த மோட்டார் சைக்கிளில் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது.


இந்த நிலையிலேயே காணாமற்போன இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையாக வல்லிபுரக் குறிச்சி வீதியில் நேற்று  திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்


இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் காணப்பட்டதை கண்ணுற்ற ஒருவர் அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அறிவித்துள்ளார்.


சம்பவ இடத்துக்குச் சென்ற அம்புலன்ஸில் இளைஞன் ஏற்றப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.


அவரது உடலில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன

No comments