உதயன் மீதான வழக்கு:ஊடக அடக்குமுறையின் ஆரம்பம்!


வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கோத்தபாய அரசினால் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள ஊடக அடக்குமுறையின் ஆரம்ப புள்ளியே உதயன் நாளிதழ் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கு என தெரிவித்துள்ளார் அப்பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் புட்டு சாப்பிட்டவர்களை பீட்சா சாப்பிட வைத்தேன் என யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியதை செய்தியாக வெளியிட்டமைக்காக எம்மை பழிவாங்க அல்லது மிரட்டும் நோக்குடன் அவர் இப்போது வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு நாம் அஞ்சப்போவதில்லையெனவும் மேலும் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

உதயன் பத்திரிகை மீதான அச்சுறுத்தல் ஏனைய அனைத்து ஊடகங்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்படவுள்ள ஊடக அடக்குமுறையின் ஆரம்பமே.

2006 முதல் 2013 வரை உதயன் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.உதயன் அலுவலகமும் இரண்டு தடவைகள் தாக்கப்பட்டது.உதயன் செய்தி ஆசிரியர் கொலை முயற்சியில் படுகாயமடைந்த நிலையில் தப்பித்திருந்தார்.

எமது நிறுவன ஊடகவியலாளர்கள் போலவே பல தமிழ் ஊடகவியலாளர்கள் வேட்டையாடி கொல்லப்பட்டனர்.

ஆனால் இக்கொலைகளிற்கோ,ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களிற்கோ இதுவரை நீதி கிட்டவில்லை.

ஆனால் ஏனைய நாளிதழ்கள் போலவே புகைப்படத்தையும் செய்தியையும் வெளியிட்ட உதயன் பத்திரிகை மட்டும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.


ஆனாலும் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் எமக்கோ உதயன் ஆசிரிய பீடத்திற்கோ இதுவரை அறிவிக்கப்படவில்லையென தெரிவித்த சரவணபவன் இத்தகைய தூண்டுதலின் பின்னணியில் உள்ளுர் முகவர்கள் கூட இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டார்.


No comments