அரசியல் கைதிகள் விடுதலை:யாழில் மாபெரும் கவனயீர்ப்பு!

 


அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்னதாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் நீதியற்ற முறையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இதனிடையே அரசியல் கைதிகளை சிறை மீட்கும் விடயத்தில் ஒன்றுபடுமாறு, அரசியல் கட்சி தலைவர்களையும், ஆன்மீகத் தரப்பினரையும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள், நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தனர். 

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினர், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் சந்தித்து இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு கோரியிருந்தனர்.


இதற்கமைவாக, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தார்த்தன்,சி.சிறீதரன்,சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள்,தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.கே. சிவஞானம் நீதி சமாதானத்துக்கான ஆணைக்குழுவின் தலைவரான அருட்பணி வணக்கத்திற்குரிய மங்களராஜா அடிகள்; அருட்பணி வணக்கத்துக்குரிய இ.ம.வி.ரவிச்சந்திரன் அடிகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டு பங்கெடுத்துள்ளனர்.



No comments