அரசியல் கைதிகளது அறைகளிலேயே கம்மன்பில இருந்தார்?



மகசீன் சிறையில் முன்னைய அரசினால் அடைக்கப்பட்டிருந்த போது அரசியல் கைதிகளது விடுதலைக்காக குரல் கொடுப்பேன் என குரல் எழுப்பிய கம்மன்பில இப்போது அரசியல் கைதிகள் என யாருமில்லையென கூறுவது வேடிக்கையானதென தெரிவித்துள்ளார் அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட றமேஸ் என்றழைக்கப்படும் ஜெயராஜா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்..ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் 2017ம் ஆண்டில் இதே கம்மன்பில எங்களுடன் கைதியாக இருந்த போது தனது குடும்பத்தை விட்டு பிரிந்தமை தொடர்பில் நாள் தோறும் கவலையுடன் காணப்படுவார்.அத்துடன் தனது கவலையினையும் பகிர்ந்துகொள்வார்.

ஏம்மை போன்ற அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அனைவரையும் திரட்டி போராடப்போவதாக தெரிவித்த அவர் விடுதலையாகி இப்போது அமைச்சராகியுமிருக்கின்றார்.

இப்போது அரசியல் கைதிகள் என எவருமில்லையெனவும் கூறுகின்றார்.

அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் நிச்சயமாக சாதாரண சிங்கள மக்கள் எவருமே எதிர்க்கப்போவதில்லை.

நிச்சயமாக ஜனாதிபதியால் அரசியல் கைதிகள் விடயத்தில் தீர்மானமாக முடிவை எடுக்கமுடியும்.

ஆனால் நீதி அமைச்சரோ அனைத்து தமிழ் கட்சி பிரதிநிதிகளும் இணைந்து வந்து ஜனாதிபதியை சந்திக்க கோருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தானாக முன்வந்து அரசியல் கைதியொருவரை வழக்குகள் நிலுவையிலுள்ள போதும் விடுவித்துவிட்டார்.

அவ்வாறு மைத்திரியால் முடியுமாயின் தற்போதைய ஜனாதிபதியால் ஏனைய அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கமுடியாதெனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

தற்போதைய கொரோனா தொற்றினால் அரசியல் கைதிகள் மோசமான வாழ்வியலை எதிர்கொண்டுள்ளனர்.

குடும்பத்தவர்கள் சென்று சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.போதிய உணவின்றி அவர்கள் பட்டினி நிலையில் வாடுகின்றனர்.

இன்னொருபுறம் சிற்றுண்டி சாலையில் உணவை வாங்க பணமோ மருத்துவ வசதிகளோ இன்றி மிகவும் பாடுபடுகின்றனர் எனவும்  ஜெயராஜா இராமநாதன் தெரிவித்தார்.

முன்னாள் போராளிகள் ஒருங்கிணைந்த மக்கள் அமைப்பின் தலைவராக றமேஸ் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.


No comments