இலங்கையின் அமைச்சரவை தகுதி என்ன?


இலங்கையின் நிகழ்கால அமைச்சரவையில் 27 பேர் அங்கம் வகிக்கிறார்கள் . இதில் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த கோத்தபாயா ராஜபக்சே , மகிந்த ராஜபக்சே , சமல் ராஜபக்சே, நாமல் ராஜபக்சே ஆகிய நால்வரும்  உள்ளடங்கி இருக்கிறார்கள் .

27 அமைச்சர்கள் அங்கம் வகிக்கும் இலங்கை அமைச்சரவையில் உள்ள  17 அமைச்சர்கள் வெறும் பாடசாலை கல்வி அல்லது அதற்கும் குறைவான படிப்பை மட்டுமே தங்களுடைய கல்வி தகுதியை  கொண்டு இருக்கிறார்கள். அதாவது இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்   63 %  வீதமான  அமைச்சர்களின் கல்வி தகுதி வெறும் பாடசாலை கல்வி அல்லது அதற்கும் குறைவானதாக காணப்படுகிறது. ஒரு பொதுமகன் பாடசாலை கல்விக்கும் குறைவான தகுதியுடன் அரச அலுவலகம் ஒன்றின்  உதவியாளராக கூட நியமனம் பெற முடியாத சூழல் நிலவும் நாடு ஒன்றில் பாடசாலை கல்விக்கும் குறைவான தகுதியுடன் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படும் விசித்திரம் இலங்கையில் தான் நிலவுகிறது. இது தவிர பேராசிரியர் பீரிஸ், சரத் ​​வீரசேகர, உதய கம்மன்பிலா தவிர்ந்த எவருக்கும்  தங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள துறை  சார்ந்த Subject Knowledge  இல்லை. 

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 18 அமைச்சர்கள் குற்ற பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள் . அதாவது 67 % வீதமான அமைச்சர்கள் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கிறார்கள் . குறிப்பாக கோட்டாபயா ராஜபக்சே , மகிந்த ராஜபக்சே, ரோஹித அபயகுணவர்த்தன,  மஹிந்தானந்தா அலுத்கமகே, எஸ்.எம்.சந்திரசேன, ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பிலா, பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே, கெஹெலியா ரம்புக்வெல்லா,பிரசன்ன ரணதுங்கே, விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்சே, சி பி ரத்தனாயக்க, டக்லஸ் தேவானந்தா ஆகியோர் மீது பல்வேறுபட்ட  ஊழல் குற்றசாட்டுகள் (அரச நிதி கையாடல்) தொடர்பான வழக்குகள்/ மோசடி புகார்கள்  நிலுவையில் இருக்கிறது 

அத்துடன்  கோத்தபாயா ராஜபக்சே , மகிந்த ராஜபக்சே , நாமல் ராஜபக்சே, ஜனக பண்டார தென்னகோன், டக்ளஸ் தேவானந்தா,  சரத் ​​வீரசேகர ஆகியோர்  தனிப்பட்ட மற்றும் அரசியல் கொலைகள் , கடத்தல்கள் சார்ந்த  கிரிமினல் குற்றங்களுடன்  தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். 

அரசியல் , பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து உயர் மட்ட தீர்மானங்களை  மேற்கொண்டு நாட்டை வழிநடத்த வேண்டிய  அமைச்சரவை அமைச்சர்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக செயல்படுவதிலும் அவர்களின் இன  மற்றும் மத நம்பிக்கைகளுக்கு  எதிராக பேசுவதற்கும் நேரத்தை செலவு செய்து வருகிறார்கள். மறுபுறம் தென்னை மரத்தில் ஏறி நின்று பத்திரிகையாளர் மாநாடு நடத்துதல் போன்ற  குறளி வித்தைகளையும் செய்து வருகிறார்கள்.  கோவிட 19 தொற்று நோய் பரவலை விஞ்ஞான ரீதியாக கட்டுப்படுத்த  முயற்சிக்காமல் மந்திர (?) நீர் கொண்ட பானைகளை நீர் நிலைகளில் கரைப்பது போன்ற  கோமாளித்தனங்களையும் செய்து வருகிறார்கள்  

No comments