பொறுப்புகளை சுமந்து கொண்டு எத்தனை நாட்கள்?



வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி சுமார் ஆயிரத்து ஐநுறு நாட்கள் தொடர் போராட்டங்களை நெருங்கும் நிலையில் இனியும் எத்தனை நாட்களுக்கு பொறுப்புகளை சுமந்து உயிர் வாழப் போகிறோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்தநடராசா வேண்டுகோள் விடுத்தார்.


யாழ் பொது நூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சாட்சியங்கள் அளிக்கப்படுகிறது என்ற ஆவணப்புத்தகத்தை வெளியிடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


2017 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சர்வதேச நீதி கோரி தொடர் போராட்டங்களை ஆரம்பித்து இன்றுவரை 70 மேற்பட்ட உறவுகளை தேடி அலையும் தாய் தந்தையரை இழந்து தீர்வின்றி போராட்டம் தொடர்கிறது.


இறுதி யுத்தத்தின்போது சரணடையுங்கள் உங்களை விடுவிப்போம் என ஒலிபெருக்கி மூலம் ராணுவம் அறிவித்ததை பல ஆயிரம் பேர் சரணடைந்தார்கள் .


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சோதனைச் சாவடிகளில் சோதனைக்குட்படுத்தப் பட்டோர் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரச கூலிப்படைகள் கடத்தப்பட்டவர்கள் என பல உறவுகளை தொலைத்த நிலையில் தீர்வு கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம்.


சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கொன்று 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை காணாமல் செய்த அரசாங்கம் தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ளது.


உலக நாடுகளின் உதவியுடன் விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் எனக்கூறிய இலங்கை அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது.


இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச நீதியே நமக்கு வேண்டும் என ஐநா வரை சென்று வலியுறுத்தியுள்ளோம்.


இன அழிப்பை செய்த இலங்கை அரசை விசாரணை செய்வதற்கு உலகநாடுகள் மறுத்த நிலையில் அவர்களிடமிருந்து நீதியை பெற்றுக்கொடுக்க எந்த நாடும் முன்வரவில்லை.


உலகத்தமிழர்களின் அயராத முயற்சியினால் ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் முனைப்புடன் குரல் கொடுக்க வழி ஏற்பட்டது.


இம் முயற்சியின் பயனாக ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசுக்கு எதிரான நெருக்குதல்கள் ஆரம்பமாகின.


துரதிஸ்டவசமாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்று ரணில் மைத்திரி கூட்டை சர்வதேசம் ஆதரித்து 30;1 தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கியது.


கால அவகாசத்தை வழங்கிய ஐநா அதனை நிறைவேற்றுவதற்கு ஒரு வரையறையோ அல்லது கால எல்லையோ குறிப்பிடாமல் இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டமை எமக்கு மன வேதனையை உண்டு பண்ணியது.


நல்லாட்சி என்ற போர்வையில் நயவஞ்சகத்துடன் செயற்பட்ட இலங்கை அரசை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளாமல் கால அவகாசத்தை வழங்கியதோடு அதற்கு சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையாகச் செயற்பட்டார்கள்.


ஆகவே வலிசுமந்த நமது போராட்டத்தை மென்மேலும் நிலைநிறுத்தி நமக்கான சர்வதேச நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு கட்சி பேதம் பாராது எல்லோரும் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் செயற்பட முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments