தமிழ் மக்களது நல்லிணக்கத்தை கோத்தா கண்டுகொள்ளவில்லை!



கோத்தா அரசிற்கு தமிழ் தரப்புக்கள் நல்லிணக்கத்தை காண்பித்தாலும் அதனை அவர் கண்டுகொள்வதாக இல்லை.இதன் ஒரு அங்கமாகவே பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகவோ அல்லது பிராந்திய விமான நிலையமாகவோ தொடர்ந்து செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை மூடுவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பலாலி விமான நிலையம் என்பது பிரித்தானியா இலங்கையை ஆண்ட காலத்தில் பிரித்தானிய அரசாங்கத்தினால் தமது விமானப்படைக்காக கட்டப்பட்ட ஒரு விமான நிலையம் அதற்கு பின்பாக விமான நிலையம் என்பது கொழும்பு, பலாலி மற்றும் பலாலியில் இருந்து திருச்சிக்கு சேவையாற்றிய விமான நிலையமாக இருந்து வந்தது.


யுத்த காலத்தில் மீண்டும் இலங்கையின் விமான நிலையமாக மாறியிருந்தது. அதேவேளை ரத்மலானை கொழும்புக்குமான போக்குவரத்து விமான நிலையமாக இடம்பெற்று வந்தது.


2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2019 ஆம் ஆண்டு தமிழ்க் கட்சிகளினால் இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக மாற்றப்பட்டது.


இந்திய அரசாங்கம் இதற்காக 300 மில்லின் ரூபாயை வழங்கியிருந்தது. சிறிய விமானங்கள் வந்து இறங்கும் விமான நிலையமாகவும் சென்னைக்கும் யாழ்ப்பாணம் பலாலிக்கும் இடையில் நடத்தும் விமான நிலையமாகத்தான் இருந்து வந்தது.


அந்த விமான ஓடு பாதையை நீளமாக்குவதன் மூலம் தான் பெரிய விமானங்கள் குறிப்பாக 100- 150 இற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து இறங்கக்கூடிய விமான நிலையமாக மாற்றவேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் மேலதிகமாக இன்னும் 300 மில்லியன் ரூபாய்களை அபிவிருத்தி செய்வதற்காக வழங்கியிருந்தது.


பணம் வழங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் கொரோனா காலத்திலும் இதனை அபிவிருத்தி செய்திக்க முடியும். ஆனால் அந்த நிதி எந்த அபிவிருத்தியும் செய்யப்படாது, அபிவிருத்திகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு, நிதி பயன்படுத்தப்படாது அரசாங்கத்திடமே உள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு கிடைத்த ஒரே ஒரு அபிவிருத்தி நிதி என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக இதனை பிராந்திய நிலையமாக மாற்றுகின்றபோது நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புக்கள், அபிவிருத்திகள், சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதன் ஊடாக சுற்றலா விடுதிகள், ஹோட்டல்கள் அபிவிருத்தி அடைகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றது.


இன்று அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுகளின் படி நாங்கள் அறிகின்றோம். அரசாங்கம் மீண்டும் இந்த விமான நிலையத்தை மூட இருப்பதாக அறிகின்றோம் சர்வதேச போக்குவரத்துக்கு அல்லது பிராந்திய போக்குவரத்துக்கு விமான நிலையத்தை மூடவுள்ளதாக அறிகின்றோம்.


இது உண்மையாகவே வடக்கு கிழக்குக்கு அபிவிருத்தி மாத்திரம் இருந்தால்போதும் தமிழ் மக்களுக்கு வேறு எந்த தேவைகளும் இல்லை எனக்கூறும் அரசாங்கம் யுத்தத்திற்கு பிற்பாடு கிடைத்த ஒரே ஒரு அபிவிருத்தியை இல்லாது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.


ஆகவே இந்த நடவடிக்கைக்கு எதிராக வடக்கு கிழக்கில் இருந்து அமைச்சர்களாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இருப்பவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஏனைய நாடாளுமன்ற உறு்பபினர்கள் இதற்காக குரல் கொடுக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments