கன்னியா:பிணையில் விடுவிக்கப்பட்ட அறங்காவலர்கள்?



கன்னியா சிவன் ஆலய அறங்காவலர் சபை நிர்வாகிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கன்னியா சிவன் ஆலயத்தில் கடந்த 20.07.2020 பொலிசாரின் உத்தரவை மீறி பூசை வழிபாடு செய்தமை மற்றும் கொரோணா காலத்தில் ஆடி அமாவாசைத் தீர்த்த பூசைக்கு மக்களை ஒன்று கூட்டியமை உள்ளிட்ட  குற்றங்களுக்கு எதிராக இலங்கை காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜீன் 8ம் திகதியன்று கன்னியா பிள்ளையார் கோவில் காணி உரிமையாளர் திருமதி க.கோகிலரமணி; உப்புவெளிக் காவல் நிலையத்தில் கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தின் மீது செய்த முறைப்பாட்டை சாதகமாகப் பயன்படுத்தி உப்புவெளி பொலிஸ் அதிகாரி கன்னியாவில் வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரே தலமான சிவன் ஆலய பூசையினைத் தடுத்தார்.

சிவன் ஆலயம் திருமதி. க.கோகிலரமணிக்குச் சொந்தமில்லை என்பதையும், நடைபெறும் பிள்ளையார் கோவில் வழக்கில் அதை அவர்கள் குறிப்பிடவில்லை என்பதையும் நிருபிக்கப்பட்டது.

இந் நிலையில் பதிவு செய்யாத ஆலயம் நிதி சேர்த்தது குற்றம் என்ற குற்றச்சாட்டிற்கு , முறையான நிதி நடவடிக்கைகளையும், கணக்காய்வையும் பொறுப்புடைய திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 08ம் திகதி அன்று நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் கொரோனாத் தாக்கத்தில் இருந்து விடுபட சிறப்பு வழிபாடு செய்ய பிரதமர் செயலகம் அறிவித்தமைக்கு அமைய உரிய ஆவனங்களுடன் கன்னியாவில் பூசை செய்வதற்குச் சென்றிருந்தோம். அன்றும் நாம் காண்பித்த அனைத்து ஆவணங்களையும் புறக்கணித்து ஆலயத்தில் பூசை செய்ய உப்புவெளிப் பொலிஸ் பொறுப்பதிகாரி அனுமதிக்கவில்லை. 

ஆலயத்தில் அனுமதிக்கவில்லை என்பதை முறைப்பாடாக பதிவு செய்ய 10ம் திகதி உப்புவெளிப் பொலிஸ் நிலையத்திற்கு க.துஸ்யந்தன் செயலாளர், கு.செந்தூரன் தலைவர், மற்றும் க.தேவகடாட்சம் பொருளாளார் ஆகியோர் சென்றிருந்தனர்.ஆனால் எமது முறைப்பாட்டை உப்புவெளிப்பொலிசார் பதிவு செய்ய மறுத்ததுடன். நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் கொண்டுவரும் பட்சத்தில் மாத்திரமே பூசை செய்ய அனுமதிக்கும் படி தனக்கு புத்தசாசன அமைச்சு அறிவித்தாக தெரிவித்துள்ளனர்.

எனவே இவரது இந்த முறையற்ற செயலையும், ஆலய பூசைக்கான தேவையற்ற தடையினையும் திருகோணமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகரிடம் 20ம் திகதி  அன்று முறையிட்ட நிலையில் முறைப்பாட்டை பதிவு செய்ததுடன் இது தொடர்பாக விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின் கடந்த 23ம் திகதி நிர்வாக சபையினைரை அழைத்த உப்புவெளிப் பொலிசார் எம்மீது இரண்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிவன் ஆலயத்தில் 20.07.2020 தமது உத்தரவை மீறி பூசை வழிபாடு செய்தமை மற்றும் கொரோணா காலத்தில் ஆடி அமாவாசைத் தீர்த்த பூசைக்கு மக்களை ஒன்று கூட்டியது

ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சம்பவம் நடைபெற்று சரியாக 4 மாதங்கள் கடந்த பின் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

எனினும் ஆடி அமாவாசை நிகழ்வு திருகோணமலை மாவட்ட பொலிஸ் பாதுகாப்புடன், உப்புவெளிப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் முழுநேரக் கண்காணிப்பில் நடைபெற்றிருந்தது நிரூபிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம்  திருகோணமலை நீதிமன்றத்தால் செயலாளர், தலைவர், மற்றும் பொருளாளார் ஆகியோர் ஒரு இலட்சம் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


No comments