8000கைதிகள் விடுதலை:அரசியல் கைதிகளிற்கு சந்தரப்பமா?
சிறைச்சாலைகளில் பொதுமன்னிப்பு வழங்கக்கூடிய கைதிகளுக்கு மன்னிப்பினை வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.ஆயினும் அரசியல் கைதிகள் இதனுள் உள்ளடங்கியிருப்பார்களாவென்பது தெரியவரவில்லை.

தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமையை கருத்தில்கொண்டு இதனை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்பட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனையை 20 வருட சிறைத்தண்டனையாக குறைக்கப்போவதாக தெரிவித்துள்ளதுடன் 8000 கைதிகளையாவது விடுதலை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 28 சிறைகளில் 28951 கைதிகள் உள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் இதன்காரணமாக சிறைச்சாலைகளில் நெரிசல்நிலைமை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீதியமைச்சு சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதும்,கடந்த 20 வருடங்களாக வழங்கப்படாத நான்கு வருட பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரினதும் தண்டனைகள் 20 வருடசிறைத்தண்டனையாக குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

20 வருடத்திற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments