தன்னாதிக்கத் தலைமை தேடும் தமிழ்த் தேசியப் போர்வைகள்! பனங்காட்டான்


தமிழ்த் தேசிய கட்சிகளை இணைக்கும் முயற்சியில் தனித்துச் செயற்படும் தமிழரசு தலைவர் மாவை சேனாதிராஜாவை கூட்டமைப்பின் செயலாளராக ரெலோவும் புளொட்டும் ஏகமனதாக தெரிவுசெய்துள்ளன. பேச்சாளர் பதவி பறிக்கப்பட்ட சுமந்திரன் தன்னிச்சையாக பிரதேச சபைத் தலைவர்களை சந்தித்து தனக்கென ஒரு கூட்டணி உருவாக்க முயற்சிக்கிறார். சுமந்திரனை ஒருவாறு தவிர்த்துவிட்டு சம்பந்தன் தனியாக இந்தியத் தூதுவரை சந்தித்து உரையாடினார். தமிழ்த் தேசியப் போர்வைக்குள் புகுந்துள்ள இவர்கள் தங்களுக்கென தன்னாதிக்கத் தலைமையை தனித்தனியாகத் தேடுகிறார்கள்.

இலங்கையைப் பொறுத்தளவில் இருபதாவது அரசியல் திருத்த அமுலாக்கமும், உலகைப் பொறுத்தளவில் அமெரிக்க அதிபர் தேர்தலும் தற்கால முக்கிய விடயங்கள். 

இதனை எழுதும்போது அமெரிக்காவின் 45வது ஜனாதிபதிக்கான தேர்தல் முடிவடைந்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெள்ளை மாளிகையின் வாயிற்கதவில் நிற்பதுபோல வாக்களிப்பு விபரம் (270ஐ அண்மித்துள்ளது) தெரிகிறது. 

ஆனால், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் இலகுவாக - ஜனநாயகப் பண்புகளுக்கமைய - மக்கள் தீர்ப்பை ஏற்று தாமாக வெளியேறுவார்போல காணப்படவில்லை. 

தேர்தல் பரப்புரைக் காலத்தின்போதே தாம் தோல்வியடைந்தால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று அவர் மீண்டும் மீண்டும் கூறியது நினைவிருக்கிறது. 

சொன்னதைச் செய்வாரென்று சொல்வதா? அல்லது கோமாளியொருவர் மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்காது கேலிக்கூத்தாடுவாரென்று கூறுவதா? சிலவேளை இதனை வாசிக்கும்போது எல்லாம் தெரிந்து முடிந்திருக்கலாம். 

ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றால் முதற்தடவையாக ஒரு பெண் - தமிழரைத் தாய்வழிப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஸ் உபஜனாதிபதியாவார்.

இலங்கையில் இருபதாவது அரசியல் திருத்தம் ரகசியமாகவும் பகிரங்கமாகவும் வேலைசெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது அத்தியாயம் பசில் ராஜபக்சவுடன் ஆரம்பமாகுமென்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

கோதாவின் பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஒருவர் பதவி துறக்க, அந்த வெற்றிடத்துக்கு பசில் நியமனமாகி முக்கிய அமைச்சராக்கப்படவுள்ளாராம். 

இது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்டதுவே. அதற்காகவே இரட்டைப் பிரஜாவுரிமை சரத்தை இருபதாவது திருத்தத்தில் நீக்க முடியாதென கோதா அடம்பிடித்து நிறைவேற்றினார். 

ராணுவ ஆட்சியில் ஒரு ஜனநாயக முகமும் தேவையென்பதால் கட்சி அரசியலை ராணுவ அரசியலுக்கு இணையாக கொண்டு செல்ல கோதாவுக்கு பசில் தேவை. இதனால் மகிந்தவின் எதிர்காலம் என்னாகும் என்பதற்கு அவரது சோதிடர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். 

இவைகள் ஒருபுறமிருக்க, தமிழர் தரப்பு அரசியல் மௌன வேகத்தில், புதிய தடங்களில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. 

ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குக் கிடைத்த தோல்வி, கூட்டமைப்பைப் பிளவுபடுத்தி குறைந்த வாக்கில் வெற்றி பெற்ற சுமந்திரனின் செயற்பாடு, அனைத்தையும் கண்களை மூடியவாறு பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தனின் அசமந்தம் என்பவைகளின் அறுவடையே இன்றைய நிலைக்குக் காரணம். 

எந்த விடயத்திலும் தோல்விதான் வெற்றியின் முதற்படி என்ற ஒரு வாய்ப்பாடு உண்டு. இது கூட்டமைப்பைப் பொறுத்தளவில் வேறுவிதமாகியுள்ளது. இவர்களுக்குள் பதவிப் பலப்பரீட்சை ஆரம்பமாவதற்கு இதுவே காரணமாயிற்று. 

தியாகி திலீபனின் நினைவுகளை முன்னிறுத்தி தமிழ் தேசிய கட்சிகளை இணைத்துச் செயற்படும் திட்டத்தை மாவை சேனாதிராஜா தனித்துக் கையிலெடுத்தார். நினைவுதின வணக்கத்துக்கு எதிராக கோதபாய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தமிழ் தேசிய கட்சிகளின் மத்தியில் ஒட்டிக்கொள்ளாத ஒருவகை உறவை ஏற்படுத்தியது. 

பட்டும் படாமலும், ஒட்டியும் ஒட்டமாலும் மூன்று தமிழ் தேசிய கட்சிகளையும் திலீபனின் தியாக ஆத்மா இணைத்தது. செத்தும் கொடுத்த சீதக்காதிபோல, தேர்தலுக்குப் பின்னரான ஓர் இணைப்புக்கு திலீபனே காரணமானது வரலாற்று நிகழ்வு. 

இந்த இணைப்பை அல்லது ஒற்றுமையை சம்பந்தன், சுமந்திரன் மட்டுமன்றி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அவ்வளவுக்கு விரும்பவில்லை. தங்களைப் புறம்போக்காகவே அவர்கள் காட்டிக் கொண்டனர்.

இதனை மாவை சேனாதிராஜா விரும்பினார் என்பதற்கு காரணமுண்டு. சுமந்திரன் இருக்குமிடத்துக்கு விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் வரமாட்டார்களென்பதால், தாமே தனித்து ஓட்டம் பிடித்து தமிழ் தேசிய கட்சிகளை ஒருசில கோட்பாடுகளின் அடிப்படையில் இணைக்கலாமென்பதே இவரது நம்பிக்கை. 

இதன் முதற் கட்டமாக விக்னேஸ்வரனுடன் தொடர்பு கொண்டு, அனுமதி பெற்று தனித்து அவர் இருப்பிடம் சென்று உரையாடினார். எனினும், இவ்வாறான சந்திப்பை கஜேந்திரகுமாருடன் இன்னமும் மேற்கொள்ள முடியவில்லை. 

சிலவேளை இதற்கு மேலும் சிலகாலம் காத்திருக்க நேரிடலாம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்றழைக்கப்படும் தமிழ் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள புதுப் பிளவுகளும் பூசல்களும் தொடர்வதால் இச்சந்திப்பு உடனடியாக சாத்தியமில்லாதும் போகலாம். 

'மற்றைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் தேவைகளின் அடிப்படையில் சேர்ந்தியங்கலாம். ஆனால், நிரந்தரமாக இணையும் விடயத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் (தமிழரசு, ரெலோ, புளொட்) என்பவை கூட்டாக முடிவெடுக்க வேண்டும்" என்று சில நாட்களுக்கு முன்னர் இரா. சம்பந்தன் மாவைக்கு எடுத்துக்கூறியது எல்லோருக்கும் தெரியும். 

ஆனால் இதனையிட்டு அவர் அதிகம் கவனமெடுக்கும் நிலையில் இல்லையென்பதை அவரது அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் காட்டுகின்றன. மாவையின் இவ்வாறான திடீர் திடீர் செயற்பாடுகளுக்கு தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவரான சி.வி.கே.சிவஞானம் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் உண்மையில்லாமல் இல்லை. தமிழரசு - கூட்டமைப்பு ஆகியவற்றின் நடவடிக்கைகளில் சிவஞானத்தை இன்றைய பீஷ்மர் என்றும் கூறலாம். 

மாவையின் நடவடிக்கைகளுக்குச் சவாலாக தனது தன்னாதிக்க ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் சுமந்திரன். யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டமைப்பின் தலைமையிலுள்ள பிரதேச சபைகளுக்கு விஜயம் மேற்கொண்டு அவற்றின் செயற்பாடுகள், வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவது போன்ற விடயங்களுக்கான ஆலோசனைச் சந்திப்பாக இது காட்டப்படுகிறது. 

கடந்த காலங்களில் என்றுமில்லாத ஒரு அரசியல் செயற்பாடு இது. கூட்டமைப்பின் பேச்சாளராக சுமந்திரன் இப்போது இல்லையென்று அதன் பங்காளிக் கட்சிகள் கூறிவரும் இந்நாட்களில், அவர் தனித்து பிரதேச சபைகளுக்கு விஜயம் மேற்கொண்டதும் அதன் தவிசாளர்களைச் சந்தித்ததும், அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுக்கப்பட்ட ஒரு திட்டமென மாவை தரப்பினரால் பார்க்கப்படுகிறது. 

இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணர்ந்து கொண்ட ரெலோ மற்றும் புளொட் தலைவர்கள் தங்களுக்குள் ஒரு தன்னாதிக்க முடிவை எடுத்தனர். தமிழரசு தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய இவர்கள் அவரை கூட்டமைப்பின் செயலாளராக நியமிக்க முடிவெடுத்து, அதனை நிறைவேற்றி தேர்தல் ஆணையகத்துக்கும் அறிவித்தனர். இவ்விடயத்திலும் மூலவராக நின்று செயற்பட்டவர் சி.வி.கே.சிவஞானமே. 

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியோடு கூட்டமைப்பின் செயலாளர் பதவியும் மாவையின் கைகளுக்குச் சென்றிருப்பது சுமந்திரன், சிறீதரன், சாரள்ஸ் நிர்மலநாதன் உட்பட்ட சிலருக்கு அடியோடு பிடிக்கவில்லை. இதனைத் தெரிந்து கொண்டே அவர்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படவுமில்லை. 

தமிழரசுப் பண்ணையில் அடிமட்டத் தொண்டராக ஆரம்பித்து, ஐம்பதாண்டுகளுக்குமேல் தமிழ் அரசியல் அரங்கில் பன்முக அனுபவங்களைப் பெற்ற மாவையை - அவர் தேர்தலில் தோல்வியடைந்து அமைதியாக இருப்பதால் தமிழ் மக்களுக்கு தொண்டாற்ற முடியாது போகலாமென எண்ணியோ என்னவோ இதுவரை இல்லாத கூட்டமைப்புச் செயலாளர் பதவியை பங்காளிக் கட்சிகள் மூன்றும் இணைந்து வழங்கியுள்ளன. 

ஆனால், சம்பந்தன் சுமந்திரன் அன்ட் கம்பனியினர் இதனை எவ்வாறு பார்க்கின்றனர், இவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? 

சமகால தமிழ்த் தேசிய அரசியல் நெருக்கடிக்குள்ளிருந்து தம்மை மீட்டெடுக்க சம்பந்தனும் தீர்மானித்திருப்பது போலவே தெரிகிறது. அண்மையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரை சம்பந்தன் தனிமையில் சென்றே சந்தித்தார். ராஜரீக மட்ட சந்திப்பொன்றுக்கு சுமந்திரனை இவர் அழைத்துச் செல்லாதது இதுவே முதற்தடவை. 

சில வாரங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவை அவரது இல்லம் தேடிச்சென்று தனிமையில் சுமந்திரன் சந்தித்தார். மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை மாவையர் அவரது இருப்பிடம் தேடிச்சென்று தனிமையில் சந்தித்து உரையாடினார். தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரையும் அவ்வாறு தனிமையில் சந்திக்கவே விரும்புகிறார். 

கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற கொரடா பதவிகளின் நியமனம் இழுபறியில் இருக்கிறது. சம்பந்தன் சரியான முடிவெடுப்பாரென்று செல்வம் அடைக்கலநாதன் கூறினாலும், அவர் கண்களை மூடிக்கொண்டு கடும் தியானத்திலிருக்கிறார். 

பார்க்கப்போனால், கூட்டமைப்பு என்ற பெரும் குடைக்குள்ளிருக்கும் ஒவ்வொருவரும், தமிழ் தேசியம் என்ற போர்வையை மூடிக்கொண்டு தன்னாதிக்க தலைமையை தேடும் முயற்சியில் நாட்டம் காட்டுகிறார்கள். இதுவே அவர்களின் தெரிவாகவும் காணப்படுகிறது. 

கோதாவின் இருபதாவது திருத்த அமுலாக்கத்தின் முன்னால், தமிழ்த் தேசிய போர்வைப் பயணிகளின் தன்னாதிக்கத் தலைமைப் போட்டி தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுக்கும்? 


No comments