45 இலட்சம் பெறுமதியான மூன்று வலம்புரி சங்குகள்! இருவர் கைது!


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு அக்கரைப்பற்று கோளாவில் பிரதேச வீடொன்றில் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின் போது 45 இலட்சம் பெறுமதியான மூன்று வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டன.

இதில் இரு சங்குகள் 20 இலட்சம் பெறுமதியுடையதெனவும்; ஒரு சங்கு 25 இலட்சம் பெறுமதியானதெனவும் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த மூன்று சங்குகளும் வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டதுடன் சம்மந்தப்பட்டவர்கள் என கருதப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து இரு கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டக்களப்பை சேர்ந்தவரெனவும் மற்றயவர் கோளாவில் பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மூன்று சங்குகளும் விற்பனை செய்வதற்கு தயாராகவிருந்ததுடன் இதில் ஒரு சங்கினை மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் விற்பனை செய்வதற்காக சம்மந்தப்பட்ட வீட்டிற்கு எடுத்து வந்திருந்தாகவும் இந்த சந்தர்ப்பத்திலேயே இருவரும் குறித்த வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதேநேரம் கைப்பற்றப்பட்ட சங்குகளையும் கைது செய்யப்பட்டவர்களையும் விசேட அதிரடிப்படையினர் மேலதிக நடவடிக்கைக்காக அக்கரைப்பற்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments