புயல் அறிவிப்பினுள்ளும் போராட்டம்?


வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பாதை சேவையை தடங்கல் இல்லாமல் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி காரைநகர் இறங்குதுறையில் இன்று காலை பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளனர்.

மேற்படி பிரதேசங்களுக்கு கடமை மற்றும் அத்தியாவசிய சேவை நிமித்தம் சென்று வரும் அலுவலர்களும் பொதுமக்களும் இப்பாதை சேவையூடாகவே பயணிக்கின்றனர். அண்மைக்காலமாக இப்பாதை சேவையில் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டு சேவை இடைநிறுத்தப்படுவதால் பயணிகள் பெருத்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். பாதை சேவை இடைநிறுத்தலுக்குரிய காரணங்களாக கேபிள் பழுது, வெளியிணைப்பு இயந்திரம் பழுது என்று கூறப்படுகின்றன. ஆனால், இவற்றைச் சீர்செய்து பாதை சேவையை இடைநிறுத்தாது தொடர்வதற்குரிய நடவடிக்கைகள் எதனையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பாதை சேவையானது கடந்த செவ்வாய்க்கிழமை (17.11.2020) தொடக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெருத்த அவலங்களுக்கு மத்தியில் படகு சேவை மூலம் ஊர்காவற்றுறைப் பிரதேசத்திற்குச் சென்று வருவதாகவும் காரைநகர் மக்கள் கவலை தெரிவித்தனர்.

எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையே சீரான போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டதாகவும் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடாக ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் ஒன்றினை இன்று கையளிக்கவுள்ளனர்

No comments