கொரோனா! பிரித்தானியாவில் காவல்துறைக்கு சிறப்பு அதிகாரம்


இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க காவல்துறையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட அறிவுறுத்தப்பட்ட போதும் பலரும் பொது வெளிகளில் நடமாடி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கபட்டு வருகின்றன. இந்நிலையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கைவிடுத்து வருகிறது.

இங்கிலாந்து அரசு மேற்கொண்ட ஆய்வில் கொரோனா உறுதியாகி, சுய தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 11 விழுக்காட்டுக்குக் குறைவானவர்கள் மட்டுமே 14 நாட்கள் சுய தனிமையை கடைபிடித்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேஷனல் ஹெல்த் சர்வீசஸ் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பவர்கள் என உறுதி செய்தவர்களின் தகவல்கள் காவல்துறையினருடன் பகிர்ந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி நபர் பற்றிய விவரங்களும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்படும் என சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு (DHSC) துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கும் காவல் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தலின் கீழ் வீடுகளில் இருக்கும் அவர்கள் வீட்டிலேயே இருக்கிறார்களா? அல்லது வெளியே செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க இந்த புதிய திட்டம் உதவும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தலை நோயாளி மீறியதாக காவல்துறையினர் கண்டறிந்தால் நோயாளிக்கு 1,000 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சட்டத்தை மீறினால் 10,000 பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments