தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பு

தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பு. 25.10.2020

யேர்மனியில் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 30 ஆவது அகவை நிறைவு விழா 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை ஸ்ருட்காட் நகரத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பும் நடைபெற்றது.

அதே மண்டபத்தில் முதல்நாள் 24.10.2020 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நடைபெற்றது. அடுத்தநாள் 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை இந் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தற்போது நிலவும் கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில் அதன் விதிமுறைகளுக்கு அமைவாக மண்டபத்தில் என்நேரமும் 100 யேர் மாத்திரம் அமர்ந்திருப்பதற்கான அனுமதி கிடைத்திருந்தது. அதன் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக மதிப்பளிப்புக்கள் பிரிக்கப்பட்டு அதற்கான நேர அட்டவணையுடன் நிகழ்வை தமிழ்க் கல்விக் கழகத்தின் வினைத்திறனாளிகள் நடாத்தியிருந்தமை பல மக்களின் கவனத்தை எட்டியிருந்தது. அங்கு வருகைதந்து மண்டப ஒழுங்கை அவதானித்த யேர்மனிய நிர்வாகத் துறையினர் தமிழ்க் கல்விக் கழகத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலை 10.30 மணிக்கு பிரதம விருந்தினரையும் வாகை சூடிய மாணவ மணிகளையும் மண்டப வாசலில் இருந்து அழைத்துவந்த கல்விக்கழகத்தின் வினைத்திறனாளிகள் மங்கலவிளக்கேற்றி அகவணக்கம் முடித்து தமிழாலய பண் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழ்த்திறன், கலைத்திறன், பொதுத்தேர்வு போன்ற விடயங்களில் நாடு தழுவிய மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் 5,10,15 ஆண்டுகள் பணியாற்றும் ஆசான்களும் மதிப்பளிக்கப்பட்டனர். 

20,25,30 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தமிழ்வாரிதி, தமிழ்மாணி ஆகிய மதிப்பளிப்புகளும் வழங்கப்பட்டன. நாடு மற்றும் மாநிலம் தழுவிய மட்டத்தில் சிறந்த தமிழாலயங்களும் இவ்வரங்கில் தமது சிறப்பான பணிக்கான மதிப்பைப் பெற்றுக் கொண்டன.  

இந்த வருடம் 30 ஆண்டுகள் பணிசெய்திருந்த மூன்று ஆசிரியர்கள் மதிப்பளிப்பைப் பெற இருந்தனர். அந்த வகையில் தென்மேற்கு மாநிலத்தில் சுல்ஸ்பாக் தமிழாலய நிர்வாகியும் ஆசிரியருமான தமிழ் வாரிதியும்,தமிழ்மாணியுமான,திருவாளர் குமாரவேலு தேவகுமார் அவர்கள் தனது 30 ஆண்டுகாலப் பணிக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டார்.

தமிழாலயங்களில் 20 வருடங்கள் பணிசெய்த ஆசிரியர்களுக்கு தமிழ்வாரிதி என்னும் சிறப்புப் பட்டத்தினையும் 25 வருடங்கள் பணிசெய்த ஆசிரியர்களுக்கு தமிழ்மாணி என்னும் சிறப்புப் பட்டத்தையும் பட்டயங்களாக வழங்கி மதிப்பளித்து வந்தனர்.30 வருடம் பணி செய்தவர்களுக்கு அவர்களின் மேலங்கியில் இதயத்திற்கு நேராக 30 ஆண்டுகள் தமிழ்ப்பணி என்னும் முத்திரை பதிக்கப்பட்ட பதக்கத்தை அணிவித்தனர். 

இப் பதக்கத்தின் மேற்பகுதியில் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள ஒரு நட்சத்திரம் அவரின் 10 வருடகாலத் தமிழ்ப்பணியை பறைசாற்றும். முப்பது வருடங்கள் நிறைவு செய்த பணியாளரின் மார்பில் மூன்று நட்சத்திரம் அடங்கிய பதக்கம் சூட்டப்பட்டிருக்கும்.

அந்த வகையிலே 30 ஆண்டுகள்; பணியாற்றித் தொடர்ந்தும் தமிழ்ப்பணி ஆற்றிக் கொண்டிருக்கும் சுல்ஸ்பாக் நிர்வாகியும் ஆசிரியருமான தமிழ்வாரிதிதியும், தமிழ்மாணியுமான,திருவாளர் குமாரவேலு தேவகுமார் அவர்கள் யேர்மனியில் முதலாவதாக தென்மேற்கு மாநில மதிப்பளிப்பு மண்டபத்தில 30 ஆண்டுகள்; தமிழ்ப்பணி என்ற சிறப்புப் பதக்கத்தை மார்பிலே ஏந்திக்கொண்டார்.

விழாவின் நிறைவில் 12ஆம் ஆண்டுவரை தமிழாலயங்களில் கல்வி பயின்று, வெளியேறும் மாணவர்களுக்கான சிறப்பு மதிப்பளிப்பு நிகழ்வும் நடைபெற்றது சுவீடன் நாட்டில் இருந்து வருகைதந்திருந்த பேராசிரியரும் ஆய்வாளருமான திரு விஐய் அசோகன் அவர்கள் 12ஆம் ஆண்டை நிறைவு செய்து வாகை சூடிய மாணவர்களுக்கு மதிப்பளிப்பைச் செய்து வைத்தார். 

இன்றைய சூழலில் பல்வகையான நோய்த்தொற்று ஐயங்கள் இருந்த போதிலும் விழாவோடு தொடர்புடைய அனைவரும் வருகை தந்து, தமது பங்களிப்பைச் செலுத்தியது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.

No comments