தசாப்தங்கள் தாண்டியபின் மீண்டும் அதே எடுபிடிகள்! பனங்காட்டான்


ஜே.ஆர். - ராஜிவ் ஒப்பந்தம் முப்பத்து மூன்று ஆண்டுகளைப் பூர்த்தி செய்தும் அதில் எதுவுமே இதுவரை உருப்படியாகவில்லை. முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பு என்னும் உறைநிலை சிங்கள தேசத்துக்கு நல்ல வாய்ப்பாகிவிட்டது. இப்போது தசாப்தங்கள் தாண்டிய பின்னர் முன்னைய கதாபாத்திரங்கள் (எடுபிடிகள்) மீண்டும் மூன்றாம் தரப்பு, பேச்சுவார்ததை, பங்களிப்பு என்ற பெயரில் நாடகத்தை ஆரம்பிக்கின்றன. 

1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிறைவேற்றிய இலங்கையின் அரசியல் யாப்புக்கான இருபதாவது திருத்தத்தை நிறைவேற்றி, இலங்கையின் முதலாவது மகாஜனாதிபதியாக தமக்கு முடிசூட்ட  கோதபாய ராஜபக்ச நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். 

எதிர்க்கட்சிகளிலிருந்து பலரை மொத்த அடிப்படையில் கொள்வனவு செய்து மூன்றிலிரண்டுக்கும் மேலாக வாக்குகளைப் பெறும் பேரவியாபாரத்தில் பசில் ராஜபக்ச தீவிரமாக ஈடுபடுகிறார். 

என்னதான் நடந்தாலும் தமது கதிரையை காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் தமது தம்பிமாருடன் மோதாமல், அதேசமயம் சூழ்நிலையின் கைதியாகி தவித்துக் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ச. 

இருபதாவது நிறைவேறினால் அடுத்தது புதிய அரசியல் திட்டம் என்பது அறிவித்தாகிவிட்டது. முன்னைய ஆட்சியில் ரணில் - சுமந்திரன் கூட்டில் உருவான அரசியல் யாப்புக்கு அரோகரா போட்டாயிற்று. புதிய அரசியலமைப்பு நிறைவேறினால் பதின்மூன்றாவது திருத்தத்தை பூதக்கண்ணாடியால் தேடினாலும் காண முடியாதென்பதை அமைச்சர்கள் பலரின் வாய்மூலம் தெரிவிக்கிறது. 

இதற்கிடையில் தமிழர் தரப்பு அரசியல்வாதிகளிடமிருந்து பதின்மூன்றாவது திருத்த அமுல், வடக்கு கிழக்கு இணைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு, சம~;டி ஆட்சியமைப்பு என்பவை பேசப்படுகிறது. 

இதற்கு ஏதுவாக மூன்றாம் தரப்பின் பங்களிப்பு, அதற்கான பேச்சுவார்த்தை பற்றி வெளியிலிருந்து குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. அதற்கு இணைவாக எரிக் சொல்கெய்மின் அறிவிப்புகளும் அதிரடியாக வந்து கொண்டிருக்கிறது. மூன்றாம் தரப்பு என்பது இந்தியா என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. 

1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அமெரிக்க வல்லாதிக்கத்துடன் இணையாதிருந்த இந்தியா, இன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் தலைமைத்துவமாக அமெரிக்க பங்களிப்புடன் இயங்கி வருகிறது. 

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் சமதானத் தூதுவராக இடம்பெற்றவர் நோர்வேயின் எரிக் சொல்கெய்ம். இவர் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்று அரசியல் வட்டாரங்களில் அறியப்பட்டவர். 

அமெரிக்காவுக்கு உலகளாவிய ரீதியில் இரண்டு முகங்கள் உண்டு. நோர்வே இதன் மென்முகம். இஸ்ரேல் இதன் வன்முகம். 

சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் ஒவ்வொரு தடவை இலங்கை சென்று இரு தரப்பையும் சந்தித்துப் பேசிய பின்னர் நேராக எரிக் சொல்கெய்ம் இந்தியா சென்று பேச்சு விபரங்களைக் கூறிவிட்டே நோர்வே செல்வார். அவ்வேளை - அமெரிக்க - இந்திய உறவு இன்றுபோல் இல்லாவிட்டாலும், இந்தியாவிடம் எரிக் சொல்கெய்ம் எல்லாவற்றையும் கூறி வந்தது அமெரிக்காவின் ஏற்பாடு என்றே சொல்லப்பட்டது. 

இந்தப் பழைய கதையை இப்போது மீள்நினைவுபடுத்துவதற்கு தேவையேற்பட்டுள்ளது. மீண்டும் இந்திய பங்களிப்புடன் பேச்சுவார்த்தை, எரிக் சொல்கெய்மின் நேரடிப் பங்கேற்பு என்பவை பற்றி செய்திகள் வருவதே இதற்கான காரணம். 

சில நாட்களுக்கு முன்னர் இலங்கைப் பிரதமர் மகிந்தவுடன் நேரலை வழியாக உரையாடிய இந்தியப் பிரதமர் மோடி, பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரினார். 

பட்டும் படாமலும் மோடி விடுத்த வேண்டுகோளுக்கு சற்றும் பிடிபடாமல் மகிந்த அளித்த பதில், 'தமிழர் உட்பட அனைத்து இன மக்களினதும் நலன் சார்ந்து அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்புத் திருத்தம் மூலம் செயற்படுவோம்" என்பது. 

அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய| என்ற சொற்றொடர் இங்கு கவனிப்புக்குரியது. அதாவது, எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வே அமுலாகும் என்பதே இதன் அர்த்தம். 

புதிய அரசியல் திருத்தமானது பதின்மூன்றை இல்லாமற் செய்யுமென்றும், பிரதமரை ஜனாதிபதி எவ்வேளையிலும் பதவி நீக்கலாமென்றும் தெரிந்த நிலையில் மகிந்தவினால் வேறு எதனையும் கூறமுடியாது. மறுதரப்பில், இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்குமிடையில் அரசியல் தீர்வு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாயின் அதில் பங்களிக்க (தரகராக) தாம் தயாரென எரிக் சொல்கெய்ம் அறிவித்துள்ளார். 

அமெரிக்கா - இந்தியா - நோர்வே ஆகியவற்றில் எந்த நாட்டின் பிரதிநிதியாக இப்பங்கை வகிக்கப் போகிறாரென்பது தெரியாது. அவரும் சொல்லவில்லை. பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழர் தரப்பு இணைந்து ஓர் அணியாக வரவேண்டுமென முன்நிபந்தனையொன்றை  முன்வைத்துள்ளார். இது கொக்குக்கு தட்டில் பால் வார்த்த கதை போன்றது. 

திலீபன் நினைவேந்தலை முன்னிறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் மூன்றும் ஒன்றுபட்டு உண்ணாவிரதம், கடையடைப்பு என்பவற்றை நடத்தியதால் அவர்களுக்குள் நிரந்தரமான ஒற்றுமை ஏற்படலாமென இப்போதைக்கு நினைக்க முடியாது. 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கும் மூன்று அணிகளுமே தங்களுக்குள் இணங்கிச் செல்ல முடியாதென்பதை இந்த வாரமும் காணக்கூடியதாகவிருந்தது. கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற கொறடா நியமனங்களில் உள்ளுக்குள் அடிபாடும் கழுத்தறுப்பும் இடம்பெறுகிறது. பேச்சாளர் பதவியில் குட்டையைக் குழப்பி கூட்டமைப்பைச் சிதறடிக்கும் முயற்சியில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் கூட்டமைப்புக்குள்ளிருந்து வெளியேறிய பின்னர் புதிய கூட்டணியை உருவாக்கிய விக்னேஸ்வரனும் முன்னணியை உருவாக்கிய கஜேந்திரகுமாரும் ஓரணியாக அவர்களுடன் இணைவார்களா என்ற கேள்வி உள்ளது. 

கடந்த பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்களே ஒற்றுமை அணியைக் கோருகின்றனர். முன்னணியிலும் கூட்டணியிலும் வென்றவர்களுக்கு தோற்றவர்களுடன் இணைய வேண்டுமா என்னும் நிலைப்பாடு அவரவர் கட்சிகளுக்குள் உண்டு. 

இவ்வேளையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கிய அறிவுரை(?) ஊடகங்களில் வெளிவந்துள்ளது. 'தமிழ் மக்களின் பொதுவிடயங்களுக்காக தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து பணியாற்றுவதில் தவறில்லை. ஆனால், அதற்கப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ரீதியாக செயற்படுவதற்கு கூட்டமைப்பின் தீர்மானத்தின் பின்னரே முடிவெடுக்கப்பட வேண்டும்" என்று ஒரு முடிச்சுப் போட்டுள்ளார். 

திலீபன் நினைவு நிகழ்வுகளில் பங்குபற்றாத சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் சம்பந்தனின் அறிவிப்பின் பின்னணியில் இருப்பதாக உள்வீட்டுக்காரர் சிலர் கூறுகின்றனர். 

இப்படியான அகச்சூழலும் புறச்சூழலும் இருக்கையில் யாருடன் யார் பேசுவது? தமிழர் அரசியல் தீர்வு விடயத்தில் எரிக் சொல்கெய்ம் எவ்வளவு தூரம் ஆத்மசுத்தியாக செயற்படுவார் என்ற கேள்வியும் தமிழ் மக்களிடம் உள்ளது. 

சமாதான கால பேச்சுவார்த்தையின் பிரதானியாக விளங்கிய இவர் 2009ன் பின்னர் தெரிவித்த சில கருத்துகள் அல்லது அபிப்பிராயங்கள் அவரின் நம்பகத்தன்மையை இல்லாமற் செய்ததை அவர் அறிவாரோ தெரியாது. இந்தியாவும்கூட அதேநிலையில்தான். 

ஜே.ஆரின் ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த லலித் அத்துலத் முதலியின் வடமராட்சி லிபரேசன் தமிழின அழிப்பை, ராஜிவ் காந்தியின் ஒப்பரேசன் பூமாலை இடைநிறுத்தியது. 

அரைக்கிலோ அரிசி, வெட்டுத்துண்டு பாண், நான்கு அவுன்ஸ் எண்ணெய், டுபாய் பூசணிக்காய் துண்டுகளைக் கொண்ட பொதியுடன் வந்த பூமாலை, பின்னர் தமிழருக்கு வாய்க்கரிசி போட்டு பிணமாலைகளைச் சூட்டிய வரலாறுக்கு வயது மூன்று தசாப்தங்கள்.

1987 அக்டோபர் மாதம் 10ம் திகதி எதற்காக இந்தியாவின் ராஜிவ் அரசு ஈழத்தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே அழித்தொழிக்கும் தாக்குதலை ஆரம்பித்தது? அன்றுகாலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி, ஈழமுரசு பத்திரிகை அலுவலகங்களின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தி அவைகளை எதற்காக நிர்மூலமாக்கியது? 

குடாநாட்டின் ஐந்து பிரதான பாதைகளால் ஆரம்பித்த இந்திய அராஜகப் படைகள் வழிநெடுகிலும் படுகொலைகளையும் சொத்துடைமை அழிப்புகளையும் கேட்பாரின்றி நடத்தியதோடு, பதினைந்தாம் நாளான தீபாவளியன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் புகுந்து கடமையிலிருந்த மருத்துவர்களையும், பணியாளர்களையும் எதற்காக சுட்டுக் கொன்றது? 

அதன் பின்னர் 1989 யூன் வரை அங்கு நிலைகொண்ட இந்தியாவின் ஏவற்படை மனிதகுலத்துக்கு எதிராக மேற்கொண்ட செயற்பாடுகள்...

அக்காலப்பகுதியில் கொழும்பிலிருந்த இந்திய தூதரகத்தில் செயலாளராகப் பணியாற்றியபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது குழுவினரையும் ராஜிவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுடில்லிக்கு அழைத்துச் சென்ற கர்திப்சிங் பூரி இப்போது மோடி அரசாங்கத்தில் ஒரு அமைச்சராகவுள்ளார். 

எனினும், இவற்றுக்கான நீதிவிசாரணைகள் இடம்பெறவில்லை. எவருக்கும் நஷ்டஈடும் வழங்கப்படவில்லை. இவையெல்லாம் எரிக் சொல்கெய்முக்கு தெரியாதவையல்ல. 

தசாப்தங்கள் கடந்த பின் மீண்டும் தமிழினத்தின் மீது சவாரி செய்ய பேச்சுவார்த்தையென்றும் பங்களிப்பு என்றும் கூறிக்கொண்டு அதே எடுபிடிகள் புதிய கோலத்தில் புறப்படுகிறார்களா?

No comments