மகிந்தவின் நினைவு மறதியும் சுமந்திரனின் நினைவு ஏந்தலும் - பனங்காட்டான்


இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த 13வது அரசியல் திருத்த அமுல் பற்றி தமக்கு நினைவில்லையென்று கூறி தப்பப்பார்த்த மகிந்தவையிட்டு ஊடகவியலாளர்கள் அனுதாபப்பட்டனர். திலீபனின் தியாகத்துக்கான நினைவேந்தலை முழுமையாக பகி~;கரித்த சுமந்திரன், இதனை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் தற்போது இல்லையென்று கூறி அவர்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் தமிழர் தேசத்தில் ஷசுமந்திரன் நீக்க அரசியல் மேலோங்கி வருகிறது. 

இந்த வாரமென்பது இலங்கை அரசியலைப் பொறுத்தளவில் பரந்துபட்ட பல விடயங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. 

ஜனாதிபதி என்னும் தனியொருவரிடம் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் குவிக்கும் அரசியல் அமைப்பின் இருபதாவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கை அரசின் அண்மைய மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா.வின் செயலாளர் அன்ரோனியோ குட்டரெஸ் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கையின் சகபாடி மகிந்தவுடன் மெய்நிகர் வழியாக உரையாடியுள்ளார். 

தியாகி திலீபனின் நினைவேந்தலை தடுத்து நிறுத்திய இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் தாயகத் தமிழர் பரவலாக உண்ணாவிரதத்தையும் முழுநாள் கடையடைப்பையும் திருப்திகரமாக நிறைவேற்றியுள்ளனர். 

வழக்கம்போல சில குரல்கள் மக்கள் எழுச்சியைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டு, சிங்கள தேசத்துக்கு மட்டுமன்றி, தங்களுக்குத் தாங்களே முதுகு சொறிந்து மகிழ்;ச்சியில் திளைத்துள்ளனர். இந்தப் பஞ்ச விடயங்களையும் மேலோட்டமாக இப்பத்தியில் பார்க்கலாம். 

சிங்கள தேச இறையாண்மை என்றும், சிங்கள தேசிய பாதுகாப்பு என்றும் வசதிக்கேற்றவாறு கூறிக்கொள்ளும் சிங்கள அரசு தனது சிங்கள மக்களையே ஆட்டிப்படைக்கப் போகும் இருபதாவது அரசியல் திருத்தத்தை எப்படியாவது நிறைவேற்றப்போவதாக கங்கணம் கட்டியுள்ளது. 

பெற்றோர் பெயர் தெரியாத அநாதைப் பிள்ளை போன்று யார் இதனைத் தயாரித்தவரென்று பகிரங்கமாகக் கூற முடியாத நிலையில், இத்திருத்தம் கோதபாய என்ற ஒருவரை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகியுள்ள மனுக்களுக்கான தீர்ப்பு சில நாட்களில் வெளியாகும். 

சில சமயம் சில திருத்தங்களுக்கு அல்லது நீக்கத்துக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம். அதனால் ஒன்றுமில்லை. அத்தீர்ப்புக்கு மதிப்பளிப்பது போன்று அதனை ஏற்றுக் கொண்டு இருபதாவது திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேறும். 

பிரதமர் மகிந்த தலைமையிலான குழு தயாரித்த அவர்களின் திருத்தங்கள் கிடப்புக்குள் செல்லும். பிரதமரை ஜனாதிபதி எப்போதும் நீக்கலாமென கோதபாயவின் திருத்தம் கூறுவதால் மகிந்த என்ன செய்ய முடியும்? எதிர்த்தால் என்ன நடக்கும்? 

சட்டவாக்கம், நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் ஆகிய மூன்றையும் கோதாவின் காலடிக்குள் கொண்டுசெல்கின்ற காலம் இது. இதனை எதிர்ப்பவர் வெறுப்பவர் மறுப்பவர் யாராக இருந்தாலும் கஜபாகு அணிக்கு பதில் சொல்ல அவர் தயாராக இருக்க வேண்டும். 

இலங்கையின் மனித உரிமைப் பாதுகாவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஜெனிவா அமர்வுக்குச் செல்லும் சிவில் சமூக அமைப்பினர் இன்றைய அரசாங்கத்தினால் கண்காணிக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, அச்சுறுத்தப்படுவது பற்றி ஐ.நா.வின் செயலாளர் அன்ரோனியோ குட்டரெஸ் தமது அறிக்கையில் சுட்டியுள்ளார். 

மனித உரிமைகள் பேரவையின் நாற்பத்தைந்தாவது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெறுகிறது. இங்கு தமது அறிக்கையை முன்வைத்து உரையாற்றிய இவர் இக்கருத்துகளை முன்வைத்துள்ளார். 

இலங்கையின் போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையைக் கோரும் 30-1 தீர்மானத்தை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகின்ற நிலையில் புதிதாக இக்குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. 

முன்னைய இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் 30-1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மைத்திரி - ரணில் கூட்டரசுக்கு ஆதரவாக இதனை நிறைவேற்றக் கால நீடிப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக் கொடுத்தது. 

பதினொரு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பதவியேற்ற கோதபாய தமது முதலாவது சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பில், 30-1 தீர்மானம் இலங்கைக்கு ஆபத்தாக அமையுமென்பதால் தமது அரசாங்கத்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவித்தது  ஞாபகமிருக்கலாம். 

இதற்குப் பின்னர் எந்த அறிக்கையும் எந்த நினைவூட்டலும் இலங்கை அரசை எதுவும் செய்யாது.  சர்வதேசத்தின் கவலையையும் கண்டனத்தையும் கேட்டுக் கேட்டு தமிழருக்கே புளித்துப் போய்விட்டது. சிங்கள தேசத்துக்கு இது மாட்டின் முதுகில் இலையான் இருப்பது போன்றது. 

இந்திய் பிரதமர் மோடியும் இலங்கைப் பிரதமர் மகிந்தவும் சில நாட்களுக்கு முன்னர் மெய்நிகர் வழியாக உரையாடினர். மகிந்த தமது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலரையும் அருகிருத்தி உரையாடியதால் மோடி குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் அம்பலமாகிவிட்டன. 

இலங்கையின் பௌத்த மத வளர்ச்சிக்கு பல கோடி ரூபா, கடற்பகுதிப் பாதுகாப்புக்கு ஐம்பது மில்லியன் ரூபா என்று தாராளமாக வழங்கி மகிந்தவை குளிர்ச்சியடையச் செய்த மோடி, இலங்கை மீதான தமது பிடியை தளர விடாது வைத்திருக்கவே இத்தனை ஷபுண்ணியாதானம்| செய்தாரென்பது பரகசியம். 

கதையோடு கதையாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் நினைவுபடுத்திய அவர், பதின்மூன்றாவது திருத்தமூடாக வழங்கப்பட்ட அதிகாரத்தை தமிழருக்கு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். மகிந்த இதற்கு எந்தப் பதிலும் வழங்கவில்லை. மோடியும் பதிலை எதிர்பார்த்திருக்காது இருந்திருக்கலாம். 

இந்திய தரப்புச் செய்திகள் மோடியின் கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்தன. இலங்கைத் தரப்பு மகிந்தபோல மௌனம் பகிர்ந்தன. அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல சில ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் பதின்மூன்றைப் பற்றி மோடி பேசவேயில்லை என்று கூறிவிட்டார். 

கடந்த செவ்வாயன்று ஊடகங்களின் முக்கியஸ்தர்களை வழமைபோன்று மகிந்த சந்தித்தவேளை, மோடி கூறிய பதின்மூன்றாவது அமுல் பற்றியே பல ஊடகர்களும் வினவினர். தம்மைச் சுதாகரித்துக் கொண்ட மகிந்த, பகிடியும் உண்மையும் கலந்த பாணியில், 'என்ன பேசினேன் என்பது நினைவிலில்லை (மறந்துவிட்டேன்)" என்று பதிலளித்தார். 

மகிந்தவுக்கு மறதி நோய் (டிமென்சியா) வந்துவிட்டதாக ஊடகவியலாளர்கள் கருதவில்லை. இருபதாவது திருத்தம் நிறைவேறுவதற்கு முன்னரே அவரை வீட்டுக்கு அனுப்பக்கூடாது என்பதால் மேலும் துளைக்காது விட்டனர். 

நிலைமை இப்படியிருக்க, தாயகத்தின் சில அரசியல்வாதிகள் மோடியை நினைத்து துள்ளிக் குதிக்க ஆரம்பித்துள்ளனர். மோடி பேசிவிட்டார், தங்களை இந்தியா கைவிடாது, இலங்கையை ஒரு கை பார்க்குமென விளாசுகின்றனர். 

போதாக்குறைக்கு கனடாவிலும் ஒரு அரைவேக்காடு ஒரு நிகழ்வில், அதனுடன் சம்பந்தா சம்பந்தமில்லாதவாறு, இந்தியா எங்களுக்காக வருகிறது என்ற பாணியில் உரையாற்றி பலரதும் நையாண்டிக்குள்ளானார். புதிய அரசியலமைப்பு அடுத்த ஆறு மாதத்துக்குள் வரும்போது மோடியும் சேர்ந்து பதின்மூன்றைத் தேடக்கூடும் என்பதுதான் இப்போது கூறக்கூடியது. 

தியாகி திலீபனின் நினைவேந்தலை இலங்கை அரசின் அநீதிக் கரங்கள் தடுத்ததையும், அதனை உடைத்து உண்ணாவிரதம் இடம்பெற்றதையும் பார்க்கையில், மறைந்த தகைசார் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு தடவை குறிப்பிட்ட, 'எதிரிதான் தமிழ்த் தேசியத்தின் பலம்" என்பது நினைவுக்கு வருகிறது. 

அண்மைய தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட மாவையர் தமது எதிர்கால இருப்புக்கு அத்திவாரமாக, தேர்தல் காலத்தில் உதைத்துத் தள்ளிய விக்னேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும் தாமே அழைத்து ஷதமிழ் தேசிய ஒற்றுமை| என்ற பதாதையின்கீழ் உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து நீதிமன்ற எல்லைகள் உண்டு. அதில் யாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை நீதிமன்றங்களில் சிங்களப் பொலிசார் தடையுத்தரவு பெற்றதால் வலிகாமத்திலும் வடமராட்சியிலும் அறிவி;த்தவாறு உண்ணாவிரதத்தை மேற்கொள்ள முடியவில்லை. 

ஏனோ தெரியாது ஊர்காவற்றுறை மற்றும் சாவகச்சேரி நீதிமன்றங்களை பொலிசார் மறந்துவிட்டனர். அந்த ஓட்டையைச் சாதகமாக்கிய தமிழ்த் தேசிய ஒற்றுமை அணி சாவகச்சேரி சிவன்கோவில் முன்றலை தமது தளமாக்கி நினைத்ததை முடித்தது. இதனையிட்டு மாவையர் தலைநிமிர்த்தி மகிழ்வடைய இடமுண்டு. 

ஆனால், மாவையரின் ஷஆப்த நண்பர்| சுமந்திரனுக்கு இது பிடிக்கவில்லை. அதனால் வழக்கம்போன்று தமது கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டார். 

திலீபன் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை என்பதே இந்த சு-மந்திரனின் கண்டுபிடிப்பு. எந்த அடிமட்டத்தை வைத்து இதனை இவர் அளந்தாரென்பது தெரியவில்லை. 

உண்ணாவிரதத்துக்கு ஒவ்வொரு இடமாக அறிவிக்க, அதனைப் பொலிசார் தடைவிதிக்க, 26ம் திகதி காலை எங்கும் எதிலும் பகிரங்கமாக அறிவிக்காது திடுதிப்பென சாவகச்சேரியில் உண்ணாவிரதம் இடம்பெற்றது. முன்னறிவிப்பின்றி இது இடம்பெற்றதாயினும் நூற்றுக்கணக்கானோர் - பெருமளவு இளையோர் பங்குபற்றி தியாகி திலீபனின் கோரிக்கையை மீள்நினைவுக்கு உட்படுத்தினர். 

இதில் சுமந்திரன் பங்குபற்றவில்லை. அவரது வலதும் இடதுமான சாவகச்சேரிவாசி சயந்தனும் பங்குபற்றவில்லை. இப்படியான நிலையில் கருத்தெதனையும் கூறாது அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும்.; தாம் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கவில்லையென்று முன்னர் கூறியவர், அந்தப் போராட்டத்தின் சாத்வீக பிதாமகரான திலீபன் பற்றிக்கூற அருகதையற்றவர் என்பது மக்கள் அபிப்பிராயம். இவரது கருத்துக்கு தமிழரசுக் கட்சியைச் சார்ந்த சட்டத்தரணி கே.வி. தவராஜா உரிய முறையில் அளித்துள்ள பதில் மிளகுக் காரமானது. 

திலீபன் பற்றி முப்பத்துமூன்று ஆண்டுகளின் பின்னர் கருத்துக் கூறும் டக்ளசுக்கும், சுமந்திரனுக்குமிடையில் வித்தியாசம் எதனையும் காணமுடியவில்லை. 

28ம் திகதி திங்கட்கிழமை கடையடைப்பு பூரணமாக வெற்றியளிக்குமெனத் தெரிந்த பின்னர், அதற்கு ஆதரவளிக்குமாறு சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் சிரிப்புக்கிடமானது. மக்களின் ஆதரவுடன் இது வெற்றி பெற்ற பின்னர் தமது வேண்டுகோளை ஏற்றே கடையடைப்பு வெற்றி பெற்றது என்று காட்டுவதற்கு இவர் எடுத்த ஷசீப|;பான முயற்சி இது. 

தமிழ்த் தேசிய அரசியல் என்பது இப்போது படிப்படியாக ஷசுமந்திரன் நீக்க அரசியல்| ஆகி வருவது நன்கு புலப்படுகிறது. காலம்தான் எப்போதும்; வழிகாட்டி, அதுவே என்றென்றும் உயர் நீதிபதி!

No comments