வனவள திணைக்களம் முடக்கம்:தேக்கு மரங்கள் அன்பளிப்பு!

 


முல்லைதீவினில் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதில் மும்முரம் காட்டிவரும் இலங்கை வனவள திணைக்களத்தை முடக்கி ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் அதிகாரிகள் அறைகளினுள் பதுங்கி கொண்டனர்.குரல் எழுப்பி அவர்களை அழைத்து கடிதங்களை கையளித்த ஊடகவியலாளர்கள் அவர்கள் அலுவலகம் முன்பாகவே மரக்கன்று நாட்டினர்.

கடந்த திங்களன்று முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரவெட்டுவது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ்.ஊடக அமைய ஒழுங்கமைப்பில் வடமாகாண ஊடகவியலாளர் சங்கங்களால் நடத்தப்பட்டிருந்தது.


முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், சட்ட விரோத மரம் வெட்டுவதை தடுக்குமாறும்,ஊடகவியலாளர்களை தாக்கியவர்கள் பக்கசார்பு இன்றி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரதி கையளிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு சென்று அங்கு ஜனாதிபதிக்கான மகஜர் கையளிக்கப்பட்டு மரம் ஒன்றையும் கையளித்தனர்.

பின் முள்ளியவளையில் உள்ள வனவள திணைக்களத்திற்கு சென்று அங்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.


அங்கு ஊடகவியலாளர்கள் மரமொன்றை கையளித்ததுடன் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தேக்கு மரங்களை பாதுகாக்க கோரி தேக்கு மரமொன்று கையளிக்கப்பட்டது. 

குறித்த காவல்துறை அதிகாரி மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகளது ஆதரவுடனேயே காடளிப்பு நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


No comments