நில ஆக்கிரமிப்பிற்கு கிழக்கு ஆளுநர் ஆதரவு?
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியிலுள்ள மேய்ச்சல் காணிகளில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதை தடுக்க தமிழ்தேசிய கூட்டமைப்பினரால் கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பினரால் வழக்குத் தாக்கல் செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று திருமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், கிழக்கு மாகாண ஆளுனருக்கும் இடையில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் சாணக்கியன் மற்றும் கோ.கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டதோடு; மாநகர முதல்வர் தி.சரவணபவான் , முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமார், முன்னாள் காணி ஆணையாளர் க.குருநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் அம்பாறை மற்றும் பொலன்நறுவையை சேர்ந்த விவசாயிகள் அனுமதியின்றி சேனைப்பயிர்ச்செய்கையை மேற்கொள்ள செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது செங்கலடி, கிரான், பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட சுமார் ஆயிரம் கால்நடை வளர்ப்பாளர்களின் இரண்டு இலட்சம் கால்நடைகளை மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்லும் செயற்பாடு தடைப்படுவதாக ஆளுனருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
ஆயினும் ஆளுநரால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆளுனர் இனக்குழுக்களை இலக்காகக் கொண்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாணத்தில் அனைத்து குடிமக்களுக்கும் சமமாக சேவை செய்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள மற்றும் தடுக்க நாடாhளுமன்ற உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு எல்லை பகுதியில் அம்பாறை மற்றும் பொலன்நறுவையை சேர்ந்த சிங்கள விவசாயிகள் அனுமதியின்றி சேனைப்பயிர்ச்செய்கையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment