சட்டத்தரணிகள் ஆஜராகமாட்டார்கள்?


முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.பணத்திற்காக சோரம் போனவர்களென சமூகம் எம்மை நகையாட அனுமதிக்கப்போவதில்லையெனவும் மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நோர்வே பிரஜை ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலுமிருவரை காவல்துறை தேடிவருகின்றது.

இந்நிலையில் முன்னணி சட்டத்தரணிகளான அன்ரன் புனிதநாயகம்,கங்காதரன் உள்ளிட்ட பலரிடமும் பிணையில் வெளியே வர குறித்த தாக்குதலாளிகள் பல இலட்சம் பணத்தை செலவிட்டு பேரம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் தமிழ் மக்களிடையே ஏறபட்டுள்ள அதிருப்தி மற்றும் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தேக்கம் தோப்புக்களை அழிப்பதில் இலங்கை வனவள திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் பின்னணி தொடர்பில் முன்னணி சட்டத்தரணிகள் அக்கறை கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாகவே நாளை முல்லைதீவு நீதிமன்றில் வழக்கு தவணையின் போது குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கள் சார்பில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வடக்கு ஊடக அமைப்புக்கள் இதே கோரிக்கையினை முன்னணி சட்டத்தரணிகளிடம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments