சிறுவர்களிற்காகவும் நீதி கோரி குரல்?


 சிறிலங்கா அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளை மீட்டெடுக்க ஐ.நாவிடம் நீதி கோரி மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா அரசாங்கத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகள் இருக்கும் இடம் அறிந்திட உங்கள் உதவி நாடி எழுதுகிறோம். உங்கள் வழிகாட்டலில் எங்கள் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்.


உலகிலேயே சிறிலங்கா அரசாங்கமே எட்டுமாதக் குழந்தைகளைக் கூட வலிந்து காணாமல் செய்த ஒரே நாடாகத் திகழ்கிறது. இந்தக் குழந்தைகள் அனைவரும் தமிழினக் குழந்தைகளே, எமது இந்தக் குழந்தைகளில் பலரும் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு 2009 மே மாதம் போரின் முடிவில் எவ்விதக்கேடும் நேரிடாது என்ற உறுதிமொழிகளை நம்பி சிறிலங்காப் படைகளிடம் பெற்றோர் தம் பிள்ளைகளோடு சரணடைந்த போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆவர். 11 ஆண்டு காலம் கழிந்த பிறகும் இந்தக் குழந்தைகள் பற்றியோ இவர்தம் பெற்றோர் பற்றியோ அரசரிடமிருந்து பதிலேதும் இல்லை.


சில குழந்தைகள் சிறிலங்காப் படைகளால் பெற்றோர் சரணடைந்த போது உடன்சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆவர். இந்தக் குழந்தைகள் எவ்வாறு சரணடைந்து கடத்தப்பட்டதற்கான கண்கண்ட சாட்சிகள் பலர் உள்ளனர்.


பல்லாண்டுக் காலமாய் இந்தக் குழந்தைகளின் உறவுகள் இந்தக் குழந்தைகளைத் தேடித் தவிக்கிறார்கள். சிறிலங்காவில் மட்டுமின்றி, ஐ நா மனித உரிமைப் பேரவையில் கூட சிறிலங்காப் படைகளும் இராணுவ உளவுத்துறையும் செய்யும் கேடுகள் உட்பட எத்தனையோ தடைகள் இருப்பினும் இந்தத் தேடல் தொடர்கிறது.


காணாமல் செய்யப்பட்ட எம் குழந்தைகள் பால் கவனம் ஈர்க்க வேண்டும் என்ற தவிப்பிலும் துடிப்பிலும், தொடர்ந்து அமைதி வழி போராட்டங்களும், உணவு மறுப்பு போராட்டங்களும் செய்து வருகிறோம். ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் எத்தனையோ வேண்டுகோள்கள் விடுத்தும் கூட சிறிலங்கா அரசாங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இந்தத் தமிழ் குழந்தைகள் பற்றிய விவரங்கள் ஏதும் தர மறுத்து வருகிறது. அவர்கள் இன்று இருந்தால் தான் சிறு குழந்தைக்கு இப்போது கிட்டத்தட்ட பதினொரு வயதாகி இருக்க வேண்டும்.


ஐ .நா மன்றத்தின் கட்டாயப்படுத்தப்படும் சட்டங்களின் (Enforced Act) விதப்புரைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு இருக்கின்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சரத்துக்களின்படி எமது குழந்தைகள் இலங்கை அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் ஐ .நா நெறிமுறைகளுக்கு அமைவாக இது ஒரு அப்பட்டமான, மனித குலத்திற்கெதிரான குற்றமாக பார்க்கப்படுவதால் ஐ .நா உயர்ஸ்தானிகரும், ஐ.நா சபையும் எமது குழந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் நேரடியாக தலையிட்டு எமது குழந்தைகளை மட்டுமல்லாது இலங்கை அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் அனைவரையும் மீட்டுத்தருமாறு மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறோம்.


இப்போது நாம் இந்த அரசை நோக்கி எமது குழந்தைகளை மீட்டுத்தர வேண்டியோ அல்லது எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டியோ அல்லது அடிப்படை உரிமைகளுக்கான அமைதி வழி ஒன்றுகூடலையோ செய்ய முடியாத அளவிற்கு இராணுவப் புலனாய்வாளர்களாலும், அரச படைகளாலும் புதிய உயிர் அச்சுறுத்தல்களுக்குள் ஆட்பட்டுள்ளோம். நாம் அரச விரோதிகள் என்றும் பயங்கரவாதிகளே ன்றும் அச்சுறுத்தப்படுகின்றோம். தொலைபேசி மூலமான மிரட்டல்களை அரச புலனாய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். எமது அகிம்சை வழிப் போராட்டங்களுக்கு தடைகளை விதிப்பதும், உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை போலி புனைதல்கள் மூலம் வழக்கிட்டு கால வரையற்று சிறையிலடைக்கவும் கோத்தபாய அரசு முயற்சிக்கின்றது.


இது ஐ.நா.சபையின் கட்டாயப்படுத்தப்படும் சட்டப்பிரிவுகளின் விதந்துரைகளின்படி “சட்டத்திற்கு புறம்பானவிதத்தில் துன்புறுத்தல், பயமுறுத்தல் மற்றும் பழிவாங்குதல் என வரைவிலக்கணம் படுத்துகின்றது. எனவே இதற்காக எமக்கான பரிகாரம்தான் என்ன?


இந்த குழந்தைகள் அனைத்தையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதிலும் இனப்படுகொலைகளை செய்தது தொடர்பிலும் தற்போது இருக்கின்ற அரசுத்தலைமையே நேரடியாக பங்கேற்று செயற்படுத்தியிருந்தது. எனவே கறை படிந்த கைகளிடம் நீதி கோர முடியாது என்பதனால் ஐ.நா.மன்றத்திடமும் உலக சமுதாயத்திடமும் எமது குழந்தைகளை மீட்டுத்தருமாறு கண்ணீருடன் வேண்டி நிற்கின்றோம்.


எத்தனையோ தமிழ்க் குழந்தைகள் வலிந்து காணாமல் செய்யப்பட்டிருப்பினும் வலிந்து காணாமல் செய்யப்பட்ட இருபத்தொன்பது (29) தமிழ்க் குழந்தைகள் மற்றும் சிறார்கள் பற்றிய செய்திகள் வலிந்து காணாமல் செய்யப்பட்ட நேரத்தில் இக்குழந்தைகளின் படம் பெயர் வயது ஆகியவை உள்ளிட்ட விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


எங்கள் குழந்தைகள் எங்கே என்று கண்டுபிடிக்க ஆவன செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் (வடக்கு கிழக்கு) என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments