கிளிநொச்சியில் 400 கட்டில்கள் தயார்?



கொரோனா சிகிச்சையளிக்க கிளிநொச்சியில் 400 கட்டில்களுடன் வைத்தியசாலை தயார் செய்யப்பட்டுள்ளது.அதேபோன்றே வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி வைத்தியசாலையும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றப்படுகின்றது.

இதனிடையே யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று நிலை சுமூகமாக காணப்படுகின்றதென யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது.

அதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் இன்று 323 குடும்பங்களைச் சேர்ந்த 595 நபர்கள் மட்டுமே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனர் மேலதிக சிகிச்சைக்காக இரணவில கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளானவரின் குடும்பத்தினர் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மருதங்கேணியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டவர்களிற்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக வீதி திருத்த பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஏனிம் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவே மருதங்கேணி பகுதியில் காணப்பட்ட அச்ச நிலைமை தற்போது நீங்கியுள்ளது.

புங்குடுதீவு பகுதியானது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.அங்குள்ள சிலரது கொரோனா தொற்று முடிவுகள் வெளிவந்ததும் தற்காலிக முடக்கம் விரைவில் நீக்கப்படவுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி தற்போது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

அங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள்.

எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.


No comments